ஆப்கானிஸ்தான் T20 அணிக்கு திரும்பும் மொஹமட் நபி

277

பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடருக்கான 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் குழாம் செவ்வாய்க்கிழமை (21) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷித் கான் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாத்தில் அந்த அணியின் முன்னாள் தலைவரும், அனுபவ சகலதுறை வீரருமான மொஹமட் நபி மீண்டும் T20i அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20i உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணியை அவர் வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, 21 வயதுடைய வலதுகை துடுப்பாட்ட வீரர் செதிக்குல்லாஹ் அதல் T20i அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுக வீரராக களமிறங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த மாதம் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கெதிரான சுற்றுப்பயணத்தின் போது ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்த நிஜாத் மசூத் மற்றும் சாஹிர் கான் ஆகிய இருவரும் மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அதேசமயம், ஆப்கானிஸ்தான் குழாத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றமாக அணியின் முன்னணி வீரர்களான ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்ரதுல்லாஹ் ஷசாய் ஆகியோர் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20i தொடர் சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் T20i குழாம் விபரம்

ரஷித் கான் (தலைவர்), ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் (விக்கெட் காப்பாளர்), இப்ராஹிம் சத்ரான், உஸ்மான் கனி, செதிக்குல்லாஹ் அதல், நஜிபுல்லாஹ் சத்ரான், அப்சர் ஷசாய், கரீம் ஜனத், மொஹமட் நபி, அஸ்மத்துல்லாஹ் உமர்சாய், குல்பதின் நைப், சராபுதீன் அஷ்ரப், நூர் அஹ்மட், முஜிபுர் ரஹ்மான், பரீத் அஹ்ட், பசால் ஹக் பாருக்கி, நவீன் உல் ஹக்.

மேலதிக வீரர்கள்: நங்யால் கரோட்டி, சஹீர் கான் மற்றும் நிஜாத் மசூத்

போட்டி அட்டவணை

மார்ச் 24 – முதலாவது T20i

மார்ச் 26 – 2ஆவது T20i

மார்ச் 27 – 3ஆவது T20i 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<