அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒற்றை டெஸ்ட் போட்டியை அயர்லாந்து அணி வென்றது.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து அயர்லாந்து அணி சரித்திரம் படைத்துள்ளது. கடந்த 2019இல் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அயர்லாந்து அணி இதற்கு முன் விளையாடிய
7 போட்டிகளிலும் தோல்வி அல்லது சமநிலையை மட்டுமே சந்தித்தது.
ஆனால் தற்போது அந்த தோல்வி சரித்திரத்தை மாற்றி எழுதியுள்ள அயர்லாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய முதல் வெற்றியை வெளிநாட்டில் பதிவு செய்த அணி என்ற தனித்துவமான உலக சாதனையும் படைத்துள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 7ஆம் திகதி ஷார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளதுடன், ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆறுதல் வெற்றியுடன் இலங்கை தொடரை நிறைவு செய்த ஆப்கான்
- இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் A அணி!
- ஆப்கான் டெஸ்ட் அணியில் முதல் தடவையாக இடம்பிடித்த குர்பாஸ்
ஒருநாள் அணிக்கு ஹஸ்மத்துல்லா ஷாகிடி தலைவராகவும், ரஹ்மத் ஷா உதவி தலைவராகவும் செயல்படவுள்ளனர். எவ்வாறாயினும், உபாதை காரணமாக இலங்கை அணியுடனான தொடரை இழந்த அந்த அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களான ரஷீத் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகிய இருவரும் அயர்லாந்துடனான ஒருநாள் தொடரிலும் இடம் பெறவில்லை.
அதேபோல, இடது கை சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் நங்யால் கரோட்டி, அண்மையில் நிறைவுக்கு வந்த இளையோர் உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்து திறமைகளை வெளிப்படுத்திய வலது கை சுழல் பந்துவீச்சாளர் அல்லாஹ் மொஹமட் ஹாசன்பர் மற்றும் வலது கை வேகப் பந்துவீச்சாளர் பிலால் சமி ஆகிய 3 வீரர்களும் முதல் தடவையாக ஆப்கானிஸ்தான் அணியில் பெயரிடப்பட்டுள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளும் ஷார்ஜாவில் மார்ச் 7, 9 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நடைபெறும்.
ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணி விபரம்;
ஹஸ்மத்துல்லா ஷாகிடி (தலைவர்), ரஹ்மத் ஷா (உதவித் தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் காப்பாளர்), இக்ராம் அலிகில் (விக்கெட் காப்பாளர்), இப்ராஹிம் சட்ரான், ரியாஸ் ஹசன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மொஹமட் நபி, குல்பைதீன் நைப், நங்யால் கரோட்டி, அல்லாஹ் மொஹமட் ஹாசன்பர், நூர் அஹ்மட், பிலால் சமி, பசால் ஹக் பாரூக்கி, நவீத் சட்ரான், பரீத் அஹமட் மலிக்.
மேலதிக வீரர்கள் – ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஷாஹிதுல்லா கமால், கைஸ் அஹ்மட்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<