இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான 18 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் குழாம் இன்று (19) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் 2023 ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக்கின் ஓர் அங்கமாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்த்தாடவுள்ளது.
ஹஸ்மத்துல்லாஹ் ஷாஹிதி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் குழாத்தில் சகலதுறை வீரர் குல்பதீன் நைப் மற்றும் 17 வயது இடதுகை சுழல் பந்துவீச்சாளர் நூர் அஹ்மட் ஆகிய இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர். குறித்த 2 வீரர்களும் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெறவில்லை.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக ஹஸ்மத்துல்லாஹ் ஷாஹிதி தொடர்ந்து செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதுவரை 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஜிம்பாப்வேக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக செயல்பட்டார். அத்துடன். அந்த ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என கைப்பற்றி அசத்தியது.
- ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து நீக்கப்படும் சாமிக்க கருணாரத்ன!
- இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடருக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது எப்படி?
இந்த நிலையில், இலங்கை அணியுடன் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக் குழாம் தொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நசீப் கான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
‘இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் ஒருசில புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதற்கு முன்பு அந்த வீரர்களின் திறமைகளை இனங்காண இந்தத் தொடர் எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. மேலும், கிரிக்கெட் உலகில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மிகப் பெரிய போட்டிக்கு தகுதி பெற இந்தத் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது’ என்று அவர் கூறினார்.
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண சுபர் லீக் தொடரில் இதுவரை 18 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 62 போனஸ் புள்ளிகளுடன் 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் உள்ள நிலையில், இலங்கைக்கு இன்னும் 6 போட்டிகள் மட்டுமே உள்ளன.
மறுபுறத்தில் 2023 உலகக் கிண்ண சுபர் லீக்கில் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 100 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. எனவே அந்த அணிக்கு இன்னும் 12 போட்டிகள் உள்ளன.
எவ்வாறாயினும், இந்தப் புள்ளிப் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பிரதான குழுவிற்கு நேரடியாகத் தகுதி பெறும். மற்ற அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் ஒருநாள் தொடர் இம்மாதம் 25ஆம் திகதி கண்டி பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், இந்த தொடரில் பங்கேற்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) நாட்டை வந்தடையும்.
ஆப்கானிஸ்தான் ஒருநாள் குழாம்
ஹஸ்மத்துல்லாஹ் ஷாஹிடி (அணித் தலைவர்), ரஹ்மத் ஷா (விக்கெட் காப்பாளர்), அஸ்மத்துல்லாஹ் ஒமர்சாய், பரித் மாலிக், பசால் ஹக் பாரூக்கி, குல்பதீன் நைப், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் (விக்கெட் காப்பாளர்), நஜிபுல்லாஹ் சத்ரான், இப்ராஹிம் சத்ரான், இக்ரம் அலிகைல் (விக்கெட் காப்பாளர்), மொஹமட் நபி, நூர் அஹ்மட், ரஷித் கான், ரியாஸ் ஹசன், ஷாஹிதுல்லாஹ் கமால், யாமின் அஹ்மத்சாய், சியா உர் ரஹ்மான் அக்பர்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<