இலங்கை A அணிக்கெதிரான 4ஆவது உத்தியோகப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளால் ஆப்கானிஸ்தான் A அணி வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை A அணி சார்பாக நிஷான் மதுஷக் அதிரடியாக துடுப்பெடுத்தாடி சதம் குவித்த போதிலும் அது கடைசியில் வீண் போனது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் A அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட ஒற்றை டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட உத்தியோகப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் இலங்கை A அணி வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று (05) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியின் முடிவுக்கு அமைய இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை A அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது.
- நுவனிந்து, சஹனின் அதிரடியுடன் இலங்கை A அணிக்கு முதல் வெற்றி
- இலங்கை A அணியில் இடம்பிடித்த மொஹமட் சிராஸ்!
- உகண்டா தொடருக்கான இலங்கை அபிவிருத்தி குழாம் அறிவிப்பு
ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் நிஷான் மதுஷ்க சதம் விளாசி அசத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 127 பந்துகளில் 115 ஓட்டங்களைக் குவித்தார். அதில் 12 பெண்டறிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதேபோல, சொனால் தினூஷ அரைச் சதம் கடந்து 78 பந்துகளில் 78 ஓட்டங்களை எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் A அணி தரப்பில் பிலால் சமி 3 விக்கெட்டுகளையும், கைஸ் அஹ்மட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் 276 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் A அணி 49.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 276 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரியாஸ் ஹஸன் 128 பந்துகளில் 106 ஓட்டங்களையும், சுபைத் அக்பரி 68 ஓட்டங்களையும், பின்வரிசையில் வந்த நங்கெலியா கரோட்டி 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்து அந்த அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றினர்.
பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சமிந்து விஜேசிங்க, வனுஜ சஹன் மற்றும் கமில் மிஷார ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (07) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை A அணி – 275/7 (50) நிஷான் மதுஷ்க 115, சொனால் தினுஷ 78, கமில் மிஷார 24, பிலால் சமி 3/54, கைஸ் அஹ்மட் 3/62
ஆப்கானிஸ்தான் A அணி – 276/6 (49.4) ரியாஸ் ஹசன் 106, சுபைத் அக்பரி 68, நங்கெலியா கரோட்டி 40, துஷான் ஹேமன்த 2/39
முடிவு – ஆப்கானிஸ்தான் A அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<