தஜிகிஸ்தானில் இடம்பெறும் 19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத்திற்கான (AFC Cup) தகுதிகாண் போட்டித் தொடரில் உஸ்பகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் இலங்கை இளம் வீரர்கள் 10-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இதே தொடரில், இலங்கை அணியினர் பலம் கொண்ட உஸ்பகிஸ்தான் அணியினருடனான போட்டியில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்திருந்தனர்.
அது போன்றே, இத்தொடரில் முதல் போட்டியாக ஏற்கனவே இடம்பெற்ற மாலைத்தீவுகளுடனான தமது ஆட்டத்தை 2-2 என்று சமநிலையில் முடித்த நிலையிலேயே இலங்கை இளம் வீரர்கள் இந்த மோதலில் உஸ்பகிஸ்தானை எதிர்கொண்டனர்.
மாலைதீவுடனான விறுவிறுப்பான ஆட்டத்தை சமப்படுத்திய இலங்கை
2018ஆம் ஆண்டிற்கான 19 வயதுக்குட்பட்ட ஆசிய…
தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் உள்ள குடியரசு மத்திய நிலைய அரங்கில் இடம்பெற்ற குழு B இற்கான இந்த மோதலின் ஆரம்பத்தில் இருந்தே இலங்கை வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
போட்டியின் 3ஆம், 11ஆம் மற்றும் 18ஆம் நிமிடங்களில் முறையே அப்து சலாமோவ், இஸ்ஸதோவ் மற்றும் இஸ்லொம் ஆகியோர் பெற்ற கோல்களினால் உஸ்பகிஸ்தான் முதல் 20 நிமிடங்களிலேயே முன்னிலை பெற்றது.
தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக அபாரம் காட்டிய அவ்வணி வீரர்கள் 21ஆம் (சலாமோவ்) மற்றும் 25ஆம் (கென்ஜபேவ்) நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்றனர்.
மறுமுனையில் எதிரணி மேலுமொரு கோலைப் பெறாமல் தடுக்கும் ஆட்டம் ஒன்றையே இலங்கை வீரர்கள் மேற்கொண்டு வந்தனர்.
முதல் பாதி: உஸ்பகிஸ்தான் 5 – 0 இலங்கை
முதல் பாதியில் இறுதியைப் போன்றே இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலும் இலங்கை வீரர்கள் தடுப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வந்தனர். எனினும் அந்த முயற்சிகள் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை.
2017ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தெரிவு
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் இன்று (16)..
ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலை உஸ்பகிஸ்தான் வீரர் சொகிரொவ் பெற்றுக் கொடுத்தார். அடுத்த 4 நிமிடங்களில் சொகிரொவ் மூலம் மற்றொரு கோல் பெறப்பட இலங்கை அணி 7 கோல்களால் பின்னிலை கண்டது.
தொடர்ந்தும் 78ஆம், 83ஆம் மற்றும் 89ஆம் நிமிடங்களில் கோல்களைப் பெற்ற உஸ்பகிஸ்தான் அணி, ஆட்டத்தின் நிறைவில் 10-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கண்டது.
இதன்போது, அப்து சலாமோவ் தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முழு நேரம்: உஸ்பகிஸ்தான் 10 – 0 இலங்கை
கோல் பெற்றவர்கள்
உஸ்பகிஸ்தான் – அப்து சலாமோவ் 3’, 21’, 78’ & 89’, இஸ்ஸடொவ் 11’, கென்ஜபேவ் 18’ & 25’, சொகிரொவ் சொகிரொவ் 63’ & 67’, மொஸ்கொவொய் 83’,