யேமனுடனான தோல்வியுடன் தொடரை முடித்த இலங்கை

299

எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) 23 வயதின் கீழ் ஆசிய கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றுத் தொடரின் A குழுவுக்கான இறுதி லீக் போட்டியில் இலங்கை 23 வயதின் கீழ் அணி யேமனிடம் 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

இந்த முடிவுடன் இலங்கை அணி தாம் பங்கேற்ற 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில் தொடரை முடித்தது.

இலங்கை முதல் பதினொருவர்

ஏற்கனவே தமது முதல் போட்டியில் சிரிய அணியை எதிர்கொண்ட டோஹாவின் சுஹைம் பின் ஹமாத் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி முன்னைய போட்டிகளை விட ஒரு வித்தியாமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் களமிறங்கியது.

இலங்கை அணியின் உப தலைவர் அசேல மதுஷான் போட்டியின் ஆரம்பத்திலேயே உபாதைக்கு உள்ளாகி மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட, 15ஆவது நிமிடத்தில் செனால் சந்தேஷ் மாற்று வீரராக மைதானத்திற்குள் வந்தார்.

போட்டியின் 29ஆவது நிமிடத்தில் யேமன் வீரரை இலங்கையின் தஸ்லிம் முறையற்ற விதத்தில் வீழ்த்தியமையினால் கோல் எல்லைக்கு வெளியில் வைத்து யேமன் வீரர்களுக்கு பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை அவ்வணியின் ஒமர் அப்துல்லாஹ் உதைய, பந்து அமான் பைசரின் முதுகில் பட்டு கோலுக்குள் சென்றது.

போட்டியின் முதல் பாதியில் யேமன் வீரர்கள் கோலுக்கு எடுத்த பல முயற்சிகளையும் இலங்கை கோல் காப்பாளர் நுவன் கிம்ஹான சிறந்த முறையில் தடுத்தமையினால், முதல் பாதி ஒரு கோலுடன் நிறைவு பெற்றது.

முதல் பாதி: யேமன் 1 – 0 இலங்கை

இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் தஸ்லிம் யேமன் வீரரை முறையற்ற விதத்தில் வீழ்த்தியமையினால் இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்று, சிவப்பு அட்டையுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அடுத்த 5 நிமிடங்களில் எமாத் மஹ்மூத் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து வேகமாக பந்தை கோலின் வலது பக்கத்தினால் கம்பங்களுக்குள் உதைந்து அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றார்.

மீண்டும் 68ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை யேமன் அணித் தலைவர் நஸ்ஸர் அஹ்மட் மிக வேகமாக கோலுக்குள் ஹெடர் செய்தார்.

அதன் பின்னரும் யெமன் வீரர்கள் கோலுக்கான முயற்சிகளை எடுத்ததாலும் நுவன் கிம்ஹான சிறந்த முறையில் அவற்றைத் தடுத்தார்.

மறுமுனையில் 10 வீரர்களுடன் விளையாடிய இலங்கை அணியும் எதிரணியின் கோல் எல்லையில் பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டாலும் கோலுக்கான முயற்சிகளை எடுக்கவில்லை.

எனவே, போட்டி நிறைவில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் யேமன் அணி வெற்றி பெற்றது. எனவே, இலங்கை 23 வயதின் கீழ் அணி இந்த தொடரில் தமது முதல் போட்டியில் சிரிய அணியிடமும், இரண்டாவது போட்டியில் கட்டார் அணியிடமும் தலா 5-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்தது.

இதனால் இலங்கை எந்தவித வெற்றிகளும் இல்லாமல் இந்த தொடரை நிறைவு செய்துள்ளது. தொடரில் 3 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலையான முடிவைப் பெற்ற கட்டார் அணி 7 புள்ளிகளைப் பெற்று, 2022ஆம் ஆண்டில் உஸ்பகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) 23 வயதின் கீழ் ஆசிய கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

முழு நேரம்: யேமன் 3 – 0 இலங்கை

கோல் பெற்றவர்கள்

யேமன் – ஒமர் அப்துல்லாஹ் 31’ எமாத் மஹ்மூத் 60’, நஸ்ஸர் அஹ்மட் 68’

குழு Aயின் புள்ளிப்பட்டியல்

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<