கட்டாரிடம் வீழ்ந்த இலங்கைக்கு இரண்டாவது தோல்வி

240

இலங்கை 23 வயதின் கீழ் அணி, 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) 23 வயதின் கீழ் ஆசிய கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றுத் தொடரின் A குழுவுக்கான தமது இரண்டாவது லீக் போட்டியில் 5-0 என்ற கோல்கள் கணக்கில் கட்டார் அணியிடம் வீழ்ந்துள்ளது.

ஏற்கனவே தமது முதல் போட்டியில் ஏமன் அணியிடம் வெற்றி பெற்ற கட்டார், முதல் போட்டியில் சிரியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அணியை வியாழக்கிழமை (28) கட்டார் தலைநகர் டோஹாவில் உள்ள கலீபா சர்வதேச அரங்கத்தில் எதிர்கொண்டது.

 இலங்கை முதல் பதினொருவர் இந்த ஆட்டம் ஆரம்பித்த நிமிடம் முதல் கட்டார் வீரர்கள் போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்தினர்.

ஆட்டத்தின் 24 நிமிடங்களின் பின்னர் கட்டார் வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்ற போதும் நடுவர் அதனை ஓப் சைட் என நிராகரித்தார்.

எனினும், அடுத்த நிமிடங்களில் இலங்கை பின்கள வீரர் முஷ்பிர் கட்டார் அணியின் ஹஷிம் அலியை கோல் எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தமையினால் கட்டாருக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை கம்பத்தின் இடது பக்கத்தினால் ஹஷிம் அலி இலகுவாக கோலாக்கினார்.

மீண்டும் 39வது நிமிடத்தில் சக வீரரின் உடம்பில் பட்டு வந்த பந்தை கட்டார் அணியின் யூசுப் மத்திய களத்தில் இருந்து வேகமாக கோலுக்குள் உதைந்து அணியை இரண்டு கோல்களினால் முன்னிலைப் படுத்தினார்.

முதல் பாதியில் கோலுக்கான அதிகமான முயற்சிகளை கட்டார் எடுத்தாலும் வெறும் இரண்டு கோல்களினால் எதிரணியை கட்டுப்படுத்த இலங்கை அணியால் முடிந்தது.

முதல் பாதி: கட்டார் 2 – 0 இலங்கை

இரண்டாம் பதி ஆரம்பமாகி 10 நிமிடங்களுக்குள் கட்டார் வீரர் இலங்கை அணியின் ஒரு திசையில் இருந்து உயர்த்தி உள்ளனுப்பிய பந்தை இலங்கை பின்கள வீரர்கள் தடுக்கத் தவற, நயிப் அல்ஹதிராமி தன்னிடம் வந்த பந்தை கோலுக்குள் ஹெடர் செய்தார்.

அடுத்த எட்டு நிமிடங்களில் மத்திய களத்தில் இருந்து பந்தை மிக வேகமாக கோல் எல்லைவரை எடுத்து வந்த அஹ்மட் அல்கனேசி, பின்கள வீரர்கள் மற்றும் கோல் காப்பாளர் நுவன் கிம்ஹானவைத் தாண்டி பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி அணிக்கான அடுத்த கோலையும் பதிவு செய்தார்.

இலங்கை அணிக்கு கிடைத்த வாய்ப்பாக 78ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் பெட்டிக்கு வெளியில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது சபீர் உதைந்த பந்து கம்பங்களை விட்டு உயர்ந்து வெளியே சென்றது.

89ஆவது நிமிடத்தில் ஹஷிம் அலி இலங்கை கோல் காப்பாளர் கிம்ஹான மூலம் பெனால்டி எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, ஹஷிம் கட்டார் அணிக்கான இரண்டாவது பெனால்டி வாய்ப்பைப் பெற்று, அவரே அதனை கோலாகவும் மாற்றினார்.

எனவே, போட்டி நிறைவில் இந்த தொடரை நடாத்தும் கட்டார் இலங்கையை 5-0 என இலகுவாக வீழ்த்தி தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்ய, இலங்கை வீரர்கள் தமது இரண்டாவது தோல்வியை பதிவு செய்தனர்.

இலங்கை அணி இந்த தொடரில் பங்கேற்கும் தமது இறுதி லீக் போட்டி எதிர்வரும் 31ஆம் திகதி ஏமன் அணிக்கு எதிரான இடம்பெறவுள்ளது.

முழு நேரம்: கட்டார் 5 – 0 இலங்கை

கோல் பெற்றவர்கள்

  • கட்டார் – ஹஷிம் அலி 28’(P) & 90’(P), Yusuf Abdurisag 39’, Naif Alhadrami 54’, அஹ்மட் அல்கனேசி 62’

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<