ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டியின் முதல் கட்டப் போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் 2-1 என்ற கோல்கள் கணக்கில் பலம் மிக்க இந்தியாவின் மோஹன் பகன் மெய்வல்லுனர் கழகத்திடம் தோல்வி கண்டுள்ளது.
இலங்கை ரசிகர்கள் பலரின் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப் போட்டி ஆரம்பமானது. ஆரம்பத்தில் மோஹன் பகன் அணி வீரர்கள் கொழும்பு அணியின் ஆட்டத்தை ஆராயும் வகையில் தளர்வான ஆரம்பத்தை வழங்கினர். இதனை பயன்படுத்தி கொழும்பு அணி வீரர்கள் முன்னேற, மோஹன் அணி வீரர்கள் பந்தை மீளப்பெற முயற்சி செய்தனர்.
இந்தியாவின் மோஹன் பகன் அணியை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளது கொழும்பு கால்பந்து கழகம்?
அதனைத் தொடர்ந்து, தமது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கிய மோஹன் பகன் கழகம் 13ஆவது நிமிடத்தில் தமது முதல் கோலைப் பெற்றது. ப்ரபிர் தாஸின் அருமையான உள்ளீட்டை கீன் லுவிஸ் தலையினால் முட்டி கோலாக்கினார்.
இதன்மூலம் போட்டியை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மோஹன் பகன் அணி, மீண்டும் ஒரு கோலைப் பெற முயற்சிக்க, கொழும்பு அணியின் தலைவர் மொஹமட் இம்ரான் லாவகமாக அந்த பந்தினை தடுத்தார்.
இவற்றிற்கு பதிலளிக்கும் முகமாக கொழும்பு அணி தமது முழு முயற்சியையும் மேற்கொண்டு விளையாடத் தொடங்கியது. 20ஆவது நிமிடத்தில் அபிஸ் ஓலயேமி சிறப்பான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினாலும், அவரால் கோலை அடிக்க முடியவில்லை.
தொடர்ந்து தமது கால்களில் பந்தை தக்கவைத்த கொழும்பு அணிக்காக ஷலன சமீர அடித்த உதையை மோஹன் பகன் அணியின் கோல் காப்பாளர் ஷில்ட்டன் போல் அபாரமான முறையில் தடுத்தார். எனினும் பந்து கோல்களை நோக்கி செல்லும் என்ற எதிர்பார்ப்பினால் ரசிகர்கள் ஆசனத்தில் இருந்து எழுந்து நின்றிருந்த ஒரு நிலையை மைதானத்தில் அவதானிக்க முடியுமாய் இருந்தது.
போட்டியின் 30ஆவது நிமிடத்தில் அபிஸ் ஓலயேமி கொழும்பு அணியின் முயற்சிகளுக்குப் பலனாக அருமையான கோல் ஒன்றை அடித்து ஆட்டத்தை சமப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கொழும்பு வீரர்கள் புத்துயிர் பெற்றது போன்று தமது ஆட்டத்தை அபாரமாகவே ஆடினர்.
தொடர்ச்சியாக மோஹன் பகன் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் விளையாடிய கொழும்பு அணியின் இரண்டாம் கோலைப் பெறுவதற்காக சர்வான் ஜோஹர் முயற்சி செய்தாலும் அவரால் கோலினை பெற முடியாமல் போனது.
முதல் பாதியில் எதிர்பார்த்ததை விட கொழும்பு வீரர்களின் ஆட்டம் மிகவும் அபாரமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது.
முதல் பாதி: மோஹன் பகன் மெய்வல்லுனர் கழகம் 01 – 01 கொழும்பு கால்பந்து கழகம்
இரண்டாம் பாதியினை இரு அணிகளும் சம பலத்துடன் ஆரம்பித்தன. இரண்டு அணிகளுக்கும் மாறி மாறி வாய்ப்புகள் அமையப்பெற்றன. மோஹன் பகன் அணிக்கு அனுபவ வீரர் டரல் டபிக் மூலமும், கொழும்பு அணிக்கு மொஹமட் சர்வான் மூலமும் பல வாய்ப்புகள் கிடைத்தன. எனினும், அவர்களால் தமது உத்திகளை கட்டுப்படுத்தி பந்தை கோலினுள் அனுப்ப முடியாமல் போனது.
மேலும் பல பிரபல வீரர்களுடன் அணியைப் பலப்படுத்தும் கொழும்பு கால்பந்து கழகம்
தமது முன்கள ஆட்டத்தை பலப்படுத்தும் முகமாக கொழும்பு அணி ஈ.பி ஷன்னவை மைதானத்திற்குள் அழைத்தது. ஷன்னவின் அறிமுகம் மூலம் போட்டியில் ஒரு சில வாய்ப்புகளையும் அவ்வணி உருவாக்கியது. குறிப்பாக ஷன்னவிற்கு கிடைத்த ஹெடர் வாய்ப்பு மயிரிழையில் அவரால் தவற விடப்பட்டது.
ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் மோஹன் பகன் அணி போட்டியின் இரண்டாவது கோலை பெற்றது. செனாஜ் சிங் பெனால்டி பகுதிக்கு வெளியில் இருந்து மிகவும் வேகமாக அடித்த பந்து மொஹமட் இம்ரானைத் தாண்டிச் சென்று கோலாக மாறியது.
அதன் பின்பு அடுத்த நிமிடத்திலேயே சர்வான் ஜோஹரிற்கு ஹெடர் வாய்ப்பு கிடைக்க ஷில்ட்டன் அதனை அருமையாகத் தடுத்தார்.
போட்டியின் 80ஆவது நிமிடத்தில் கொழும்பு அணிக்கு மற்றுமொரு அருமையான வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. மோமஸ் யாபோ, ஓலயேமிக்கு அனுப்பிய பந்தினை அவர் லாவகமாக ரிப்னாஸிற்கு வழங்கினார். எனினும் ரிப்னாஸ் அடித்த பந்து கோல் கம்பனிகளுக்கு சற்று வெளியே சென்றது.
தொடர்ந்தும் கொழும்பு அணி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் விளையாடிய போதிலும் அவர்களால் மற்றொரு கோலினை பெற்றுக்கொள்ள முடியாமல் போக இறுதியில் 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் மோஹன் பகன் மெய்வல்லுனர் கழகம் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த கட்டப் போட்டி இந்தியாவின் கொல்கத்தா eகரில் இடம்பெறவுள்ளது.
முழு நேரம்: மோஹன் பகன் மெய்வல்லுனர் கழகம் 02 – 01 கொழும்பு கால்பந்து கழகம்
ThePapare.com சிறப்பாட்டக்காரர்- செனாஜ் சிங் (மோஹன் பகன் மெய்வல்லுனர் கழகம்)
கோல் பெற்றவர்கள்
கொழும்பு கால்பந்து கழகம் – அபிஸ் ஓலயேமி 30′
மோஹன் பகன் மெய்வல்லுனர் கழகம் – கீன் லுவிஸ்13′, செனாஜ் சிங் 70′
மஞ்சள் அட்டை
கொழும்பு கால்பந்து கழகம் – நாகுர் மீரா 32′, மோமஸ் யாபோ 56’, அபீல் மொஹமட் 90’
மோஹன் பகன் மெய்வல்லுனர் கழகம் – பிக்ரம்ஜீத் சிங் 68′