பூட்டான் கழகத்திற்கு எதிராக கோல் மழை பொழிந்த கொழும்பு கால்பந்து கழகம்

759

பூட்டானின் டிரான்ஸ்போட் யுனைடெட் அணிக்கு எதிரான AFC கிண்ண தகுதிகாண் சுற்றுப் போட்டியில் கோல் மழை பொழிந்த கொழும்பு கால்பந்து கழகம் 7-1 கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

கொழும்பு, ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற இந்தப் போட்டியில் கடும் ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய கொழும்பு அணி எதிரணி கோல் எல்லையை அடிக்கடி ஆக்கிரமிப்பதை காண முடிந்தது.

தமது வெற்றி பற்றி கொழும்பு கால்பந்து கழகம் நம்பிக்கை

போட்டியின் 5 ஆவது நிமிடத்திலேயே செயற்பட ஆரம்பித்த மொஹமட் ஆகிப் முதல் கோலை பெற்று தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இதன்போது டக்சன் புஸ்லஸ் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து உதைத்த பைசிகிள் கிக்கை சமாளிக்க எதிரணி கோல்காப்பாளர் ஹரி குருங்ஸ் தடுமாறியபோது பந்தை பெற்ற ஆகீப் அதனை இலகுவாக வலைக்குள் செலுத்தினார்.   

இதன் பின்னர் 3 நிமிடங்கள் கழித்து மீண்டும் செயற்பட்ட ஆகீப், மோசே காபோ பெற்றுத்தந்த பந்தை கோல் எல்லைக்கு அப்பால் தொலைவில் இருந்து மிக வேகமாக உதைத்து மற்றொரு கோலைப் பெற்றார்.

தொடர்ந்து போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு தடவை செயற்பட்ட ஆகீப், மொஹமட் பஸால் பரிமாற்றிய பந்தை கோலாக மாற்றினார். இதன் மூலம் தனது ஹெட்ரிக் கோலை பெற்ற ஆகீப், கொழும்பு அணியை 3-0 என முன்னிலை பெறச் செய்தார்.  

இந்நிலையில் போட்டியின் 20 ஆவது மற்றும் 25 ஆவது நிமிடங்களில் டிரான்ஸ்போட் யுனைடெட் அணியினருக்கு கோல் எல்லைக்கு மிக அருகில் இரு ப்ரீ கிக் வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவைகளை பெற்றுகொண்ட கெசேங் ஜம்சோ கோலாக மாற்ற தவறினார்.

தொடர்ந்து போட்டியின் 27 ஆவது நிமிடத்தில் கொழும்பு கால்பந்து கழக வீரர் யாபோ பரிமாற்றிய பந்தை பொட்ரிக் டிமித்ரி தலையால் முட்டி வலைக்குள் செலுத்தினார். எதிரணியான பூட்டான் கழகத்தின் வெற்றி வாய்ப்பு மேலும் தூரமானது.  

போட்டியின் முதல் பாதியின் எஞ்சிய நிமிடங்களிலும் கொழும்பு அணிக்கு மேலும் கோல்கள் பெறும் வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவை தவறிப்போயின.

முதல் பாதி: கொழும்பு கால்பந்து கழகம் 4 – 0 டிரான்ஸ்போட் யுனைடெட்

கொழும்பு கால்பந்து கழகத்தினர் முதல் பாதி போன்றே இரண்டாவது பாதியிலும் ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு முதல் சில நிமிடங்களுக்குள் ஹகீமுக்கு தலையால் முட்டி கோல் ஒன்றை பெற வாய்ப்பு கிடைத்தபோதும் அந்த பந்து கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியேறிது.    

எவ்வாறாயினும் சில நிமிடங்கள் கழித்து டிரான்ஸ்போட் யுனைடெட் அணியின் அபூபக்கர் பாகியா மூலம் டிமிட்ரி முன் இழைத்த தவறுக்காக நடுவர் பாகியாவுக்கு நேராடியாக சிவப்பு அட்டை காட்டியதால் போட்டி முழுமையாக கொழும்பு அணிக்கு சாதகமாக மாறியது.  

இதன்படி 68 ஆவது நிமிடத்தில் ஆகீபுக்கு கோல் ஒன்றை பெறுவதற்கு மற்றொரு இலகு வாய்ப்பு ஒன்று கிடைத்தது. எனினும் அவர் உதைத்த பந்தை தடுப்பதற்கு குருங்கினால் முடிந்ததோடு அப்போது அந்தப் பந்து டிமித்ரியிடம் சென்றபோதும் அவர் பந்தை பெற தவறியதால் மற்றொரு வாய்ப்பு நழுவியது.

AFC கிண்ணத்திற்காக கொழும்பு குழாத்தில் மூன்று புது வீரர்கள்

எவ்வாறாயினும் போட்டியின் 76 ஆவது நிமிடத்தில் செயற்பட்ட டிமித்ரி, சலன சமீர பெற்றுக்கொடுத்த பந்தை எதிரணி கோல் எல்லைக்கு மிக நெருக்கமாக இருந்து பெற்று போட்டியில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.  

இதனிடையே டிரான்ஸ்போட் யுனைடெட் அணி நோபு லெப்சா மூலம் போட்டியில் முதல் கோலாக ஆறுதல் கோல் ஒன்றை பெற்றது. அப்போது செப்வா பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து உதைத்த பந்து துள்ளி வந்த நிலையில் கொழும்பு கோல்காப்பாளர் மொஹமட் இம்ரானினால் தடுக்க முடியாமல் போனது.   

தொடர்ந்து ஸர்வான் ஜொஹார் உதைத்த பந்தை சிறப்பாக தடுப்பதற்கு குருங்கினால் முடிந்தது. எவ்வாறாயினும் அந்தப் பந்து ஆசிகுர் ரஹ்மானிடம் சென்றபோது அவர் அதனை இலகுவாக கோலாக மாற்றினார்.  

போட்டி முடிவதற்கு சற்று முன் மீண்டும் செயற்பட்ட டிமித்ரி, சலன பெற்றுத் தந்த பந்தை கோலாக மாற்றினார். இதன் மூலம் கொழும்பு அணி அபார வெற்றி ஒன்றை பெற்றது.

முழு நேரம்: கொழும்பு கால்பந்து கழகம் 7 – 1 டிரான்ஸ்போட் யுனைடெட்

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – மொஹமட் ஆகிப் (கொழும்பு கால்பந்து கழகம்)

கோல் பெற்றவர்கள்

கொழும்பு கால்பந்து கழகம் – மொஹமட் ஆகீப் 5′, 8′ & 11′, போட்ரிக் டிமித்ரி 27′, 76′ & 87′, ஆசிகுர் ரஹ்மான் 81′

டிரான்ஸ்போட் யுனைடெட் – நோபு லெப்சா 77′

சிவப்பு அட்டை

டிரான்ஸ்போட் யுனைடெட் – அபூபக்கர் பாகியா

மஞ்சள் அட்டை

கொழும்பு கால்பந்து கழகம் – டக்ஸன் புஸ்லஸ்

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<