நேபாளத்தின் திரிபுவான் இராணுவப்படை கால்பந்து கழகத்திற்கு எதிரான 2021ஆம் ஆண்டிற்குரிய ஆசிய கால்பந்து கிண்ணத் தொடரின் பூர்வாங்க நிலை (AFC Cup 2021 Preliminary Stage) போட்டியில் இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகம் 5-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி கண்டுள்ளது.
கத்மண்டுவில் உள்ள டஷ்ரத் அரங்கில் இன்று (07) இடம்பெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் திரிபுவான் இராணுவ அணி வீரர்கள் கோலுக்கான அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தினர்.
சுபர் லீக் போட்டி அட்டவணை வெளியானது: தொடர் முகாமையாளராக ரஹ்மி
எனினும், ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் பொலிஸ் வீரர் ஐசாக் தமது திசையில் இருந்து உயர்த்தி அனுப்பிய பந்தைப் பெற்ற எவன்ஸ், பொலிஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
இதற்கு எதிராக தமது ஆட்டத்தை அதிகரித்த நேபாள வீரர்கள், சன்தொஷ் டமங் (41‘), நவாயங் ஷ்ரெஸ்டா (43‘) ஆகியோர் மூலம் அடுத்தடுத்த கோல்களைப் பெற, முதல் பாதி நிறைவில் மேலதிக ஒரு கோலினால் முன்னிலை பெற்றனர்.
முதல் பாதி: திரிபுவான் இராணுவ கா.க 2 – 1 பொலிஸ் வி.க
போட்டியின் இரண்டாம் பாதியிலும் திரிபுவான் இராணுவ வீரர்கள் தமக்கிடையிலான பந்துப் பரிமாற்றங்களை அதிகரிக்க, இரண்டாம் பாதி ஆரம்பித்து 5 நிமிடங்களில் டன்கா பஸ்னெட் மூலம் அடுத்த கோலையும் பெற்றனர்.
மைதானத்திற்குள் மாற்று வீரராக வந்த சுதில் ராய், ஆட்டத்தின் 83ஆவது நிமிடத்தில் திரிபுவான் இராணுவத்திற்கான நான்காவது கோலையும் பெற்றுக் கொடுத்ததார்.
Video – நடுவர்களினால் பறிக்கப்பட்ட ரொனால்டோவின் வெற்றி கோல் !| FOOTBALL ULAGAM
தொடர்ந்தும் சளைக்காமல் ஆடிய திரிபுவான் இராணுவ அணிக்கு போட்டியின் உபாதையீடு நேரத்தில் நவாயங் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார். எனவே, போட்டி முடிவில் திரிபுவான் இராணுவப்படை கால்பந்து கழகம் 5-1 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியினைத் தொடர்ந்து, திரிபுவான் இராணுவப்படை கால்பந்து கழகம், இந்த தொடரில் தமது அடுத்த போட்டியில் இந்தியாவின் பெங்களூரு கால்பந்து கழகத்தை இம்மாதம் 14ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.
முழு நேரம்: திரிபுவான் இராணுவ கா.க 5 – 1 பொலிஸ் வி.க
இலங்கை பொலிஸ் வி.க – எவன்ஸ் அசன்டெ 28‘
திரிபுவான் இராணுவ கா.க – சன்தொஷ் டமங் 41‘, நவாயங் ஷ்ரெஸ்டா 43‘ & 93‘, டன்கா பஸ்னெட் 50‘, சுதில் ராய் 83‘
>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<