பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ள உலக பதினொருவர் அணியின் 15 வீரர்களின் பெயர் விபரம் நேற்று (24) வெளியிடப்பட்டது. குறித்த குழாமில் இலங்கை வீரர் திஸர பெரேரா உள்வாங்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 12ஆம் திகதி லாகூரில் ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் விளையாடவுள்ள வீரர்களுக்கு பெரும் தொகைப் பணத்தை சம்பளமாகக் கொடுக்கவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளது.
சாதனை இணைப்பாட்டத்துடன் இலங்கையை வீழ்த்திய இந்தியா
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது…
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது போது, இலங்கை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குல் நடத்தினர். இதனால் சர்வதேச அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்புத் தெரிவித்து வந்தன.
எனினும், 2 வருடங்களுக்கு முன் ஜிம்பாப்வே அணி மட்டும்தான் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியுள்ளது. தற்போது தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை, உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்குகிறோம், பாகிஸ்தான் வந்து விளையாடுங்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை வேண்டுகோள் விடுத்திருந்தும், எந்தவொரு நாடும் பாகிஸ்தான் சென்று விளையாட முன்வரவில்லை.
இந்நிலையில், இவ்வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை பாகிஸ்தானில் வெற்றிகரமாக நடத்தியதை அடுத்து, பாதுகாப்பு குறித்து ஆராய ஐ.சி.சியின் பாதுகாப்புக் குழு பாகிஸ்தான் சென்றது. இந்தக்குழு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து சாதகமான தகவலை அறிவித்தது.
இதனையடுத்து கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஐ.சி.சியின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சர்வதேச அணிகள் பாகிஸ்தான் வந்து விளையாடுவதற்கு முன்னோட்டமாக ஐ.சி.சி. உலக பதினொருவர் அணியை பாகிஸ்தான் சென்று விளையாடும் வகையில் ஐ.சி.சி அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி அடுத்த மாதம் இடம்பெறவுள்ள குறித்த தொடரில் இந்தியாவைத் தவிர ஏனைய 7 நாடுகளிலிருந்து 15 வீரர்கள் உலக பதினொருவர் அணிக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர். தென்னாபிரிக்க அணித் தலைவர் பாப் டு ப்ளெஸிஸ் இவ்வணியை தலைமை தாங்கி வழிநடாத்தவுள்ளார்.
டு ப்ளெஸிஸ், ஹசீம் அம்லா, டேவிட் மில்லர், மோர்னி மோர்கல் மற்றும் பாகிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இம்ரான் தாஹிர் என மொத்தம் 5 தென்னாபிரிக்க வீரர்கள் இந்த குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வு பெற்ற அவ்வணியின் முன்னாள் தலைவர் போல் கொல்லிங்வூட்டும் இவ்வணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச தரத்திலான போட்டியாகக் கருதப்படும் இந்த மூன்று போட்டிகளையும் முன்னிட்டு பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்ற உயர் பாதுகாப்பை வழங்குவதற்கு பஞ்சாப் அரசு அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதி ஏற்கனவே அறிவித்தார்.
சங்காவை அடுத்து இலங்கை அணியை உற்சாகமூட்டும் மஹேல
இளம் வீரர்களை அதிகமாகக் கொண்ட இலங்கை அணிக்கு அண்மைக்காலமாக..
இதுகுறித்து நஜாம் சேதி கருத்து வெளியிடுகையில், ”உலக பதினொருவர் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடவுள்ளதை மகிழ்ச்சியுடன் நான் சொல்லிக்கொள்கிறேன். இதன்படி இந்தியா தவிர, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்தவர்கள் அணியில் இடம்பெறவுள்ளனர்.
எந்தவித இடையூறுமின்றி உலக பதினொருவர் அணி பாகிஸ்தான் வந்து விளையாடினால், செப்டம்பர் மாத இறுதியில் இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் வந்து குறைந்தது 2 T-20 போட்டிகளில் விளையாடும். அதன்பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியும் 3 போட்டிகளைக் கொண்ட T-20 தொடரில் விளையாட ஒக்டோபர் மாதம் பாகிஸ்தான் வருவதை உறுதி செய்துள்ளது. எனவே, இந்த வாய்ப்புகள் ஏனைய சர்வதேச அணிகள் பாகிஸ்தான் வந்து விளையாட முக்கிய காரணமாக அமையும். இது மெதுவான நடைமுறையாக இருந்தாலும், தற்போது நாங்கள் சரியான வழியில் சென்றுகொண்டிருக்கிறோம்” என்றார்.
இந்நிலையில் ஐ.சி.சியின் பாதுகாப்புப் பிரிவினர் இம்மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு நிலமைகள் குறித்து ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழாம்
பப் டு ப்ளெஸிஸ் (அணித் தலைவர்), ஹசிம் அம்லா, சாமுவேல் பத்ரீ, ஜோர்ஜ் பெய்லி, போல் கொல்லிங்வூட், பென் கட்டிங், கிரேன்ட் எல்லியட், தமீம் இக்பால், டேவிட் மில்லர், மோர்னி மோர்கல், டிம் பெய்ன், திஸர பெரேரா, இம்ரான் தாஹிர், டர்ரென் சமி
பயிற்றுவிப்பாளர்
அன்டி பிளவர் (ஜிம்பாப்வே)