இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) 2020 தொடரில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் கேன் ரிச்சட்சனுக்கு பதிலாக மற்றுமொரு அவுஸ்திரேலிய வீரரான அடம் ஸம்பா அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 10ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், அபுதாபி, சர்ஜா ஆகிய மூன்று இடங்களில் மூடிய மைதானத்தில் இரசிகர்கள் இன்றி நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலிய தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள், T20 குழாம்கள் அறிவிப்பு
அதன்படி குறித்த தொடருக்கான அனைத்து அணியிலும் குறிப்பிட்ட வீரர்கள் ஐக்கிய அரபு இராச்சியம் சென்று தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளன. இதில், சென்னை சுப்பர் கிங்ஸ் தவிர்ந்த ஏனைய அணி வீரர்கள் வலைப்பயிற்சிகளில் இறங்கியுள்ளனர்.
13ஆவது ஐ.பி.எல் தொடருக்காக கடந்த வருடம் நடைபெற்ற ஏலத்தில் அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளரான கேன் ரிச்சட்சன் அடிப்படை விலையான ரூ. 1.5 கோடியில் இருந்து இறுதியில் ரூ. 4 கோடிக்கு விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டார்.
We’re thrilled to welcome Adam Zampa in RCB colours. He replaces Kane Richardson. Let’s #PlayBold Adam Zampa. ??#PlayBold #IPL2020 #WeAreChallengers pic.twitter.com/63rnT8SvSV
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 31, 2020
இந்நிலையில் குறித்த ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று வாரங்களுக்கும் குறைவான காலப்பகுதி எஞ்சியுள்ள நிலையில் கேன் ரிச்சட்சன் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவரது மனைவிக்கு முதல் குழந்தை கிடைக்கவுள்ளதன் காரணமாகவே இவ்வாறு அவர் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் பூனே வோரியர்ஸ் அணியில் ஐ.பி.எல் அறிமுகம் பெற்ற கேன் ரிச்சட்சன் இதுவரையில் 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடியிருந்தார்.
தரங்க பரணவிதான ஏன் திடீர் ஓய்வை அறிவித்தார்?
தற்போது அவருக்கு பதிலாக 28 வயதுடைய அவுஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சாளர் அடம் ஸம்பா அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு எம்.எஸ் டோனி தலைமையிலான ரேசிங் பூனே சுப்பர்ஜெயின்ட் அணியில் ஐ.பி.எல் அறிமுகம் பெற்ற அடம் ஸம்பா 2016, 2017 ஆகிய இரு ஐ.பி.எல் தொடர்களில் ரேசிங் பூனே சுப்பர்ஜெயின்ட் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 சர்வதேச தொடர்களில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய குழாம் தற்போது இங்கிலாந்து மண்ணில் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் குறித்த குழாமில் கேன் ரிச்சட்சன் மற்றும் அடம் ஸம்பா ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் குழாமில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர் இசுறு உதான இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<