விளையாட்டுத்துறை சட்டமூலத்தை திருத்தியமைக்க அறுவர் கொண்ட குழு நியமனம்

252

வருடாந்த கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறுகின்ற விளையாட்டு சங்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

இதேநேரம், விளையாட்டுத்துறை சட்டமூலத்தை திருத்தியமைப்பதற்கான 6 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

தேசிய விளையாட்டுத்துறை சட்டவிதிகளில் நிலவுகின்ற குறைபாடுகளை திருத்தி அமைப்பது தொடர்பாக விளையாட்டுத்துறை சங்கங்களின் பிரதிநிதிகளுடன் விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (26) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்த நீதிமன்றத்தால் தடை உத்தரவு

இந்தக் கலந்துரையாடலில் நாட்டிலுள்ள 64 விளையாட்டு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்காத விளையாட்டு சங்கங்கள் குறித்து அமைச்சர் என்ற வகையில் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன். நிதி மோசடிகளைக் கண்டுபிடிக்க கணக்காய்வு அறிக்கை மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக, கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்காத சங்கங்களில் அதிக பிரச்சினைகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதுமாத்திரமின்றி, விளையாட்டு சங்கங்களின் தலைவர்களாக ஆசனங்களில் அமருகின்றவர்கள் கடந்த கால கணக்காய்வு அறிக்கைகளை உதாசீனப்படுத்தக்கூடாது. மேலும் பதவிக்கு வருவதற்கு முன் இடம்பெற்ற மோசடிகளுக்கு தாம் பொறுப்பில்லை என நழுவிடவும் முடியாது. அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுத்து, கணக்காய்வு அறிக்கைகளை பெற்ற பின்னர்தான் தலைமைப் பதவிக்கான ஆசனம் குறித்து சிந்திக்கவேண்டும்” என அவர் தெரிவித்தார்.

”மேலும், விளையாட்டுத்துறையில் நாம் எதிர்பார்ப்பது ஒற்றுமையாகும். ஆனால் இந்நாட்டில் உள்ள விளையாட்டு சங்கங்களில் நிலவுகின்ற பிரச்சினைகளை உற்றுநோக்கும் போது அங்கு ஒற்றுமை நிலவுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. உலகின் எந்தவொரு நாட்டை எடுத்துக்கொண்டாலும் விளையாட்டின் மூலம் சகவாழ்வு, சகோதரத்துவம், இணக்கப்பாடு என்பனவே முன்மாதிரியாக எடுத்துக்காட்டப்படுகின்றது. ஆனால் இலங்கையில் அப்படி இல்லை. எனவே விளையாட்டு சங்கங்களில் ஒற்றுமை அவசியம்” எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை விளையாட்டுத்துறை சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், ”1973 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விளையாட்டு சட்டவிதிகளை நோக்கும்போது விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அதிக பொறுப்புக்களும், அதிகாரங்களும் இருப்பதைக் காணலாம்.

ஆசிய கிண்ண மகளிர் டி-20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இதேநேரம், இலங்கையின் விளையாட்டுத்துறை சட்ட மூலம் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் காலத்தில் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில சரத்துக்களின் கீழ் செயற்படுவது மிகவும் கடினமாக உள்ளது.

இது என்னைப் பொறுத்தமட்டில் பிரச்சினையாகும். எனவே இவை குறித்து விளையாட்டு சங்கங்களுடன் விரிவாக கலந்துரையாடுவதும், விவாதிப்பதும் அவசியமாகும். அத்துடன், சில சங்கங்களில் நிலவுகின்ற நிர்வாக சிக்கல்கள், சீர்கேடுகள் என்பவை குறித்தும் உரிய நடவடிக்கை எடுத்து அவற்றை சீர்செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக” அவர் மேலும் தெரிவித்தார்.

”அதுமாத்திரமின்றி, இதுதொடர்பில் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அறுவர் கொண்ட நீதிபதிகள் குழாமொன்றை நியமித்துள்ளேன். அவர்கள் தன்னார்த்துவடன் முன்வந்து இலவசமாக இந்த சேவையைப் பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளனர். எனவே இரண்டு வாரங்களுக்குள் விளையாட்டுத்துறை சட்டமூலத்தை திருத்தி அமைப்பது தொடர்பில் அனைத்து விளையாட்டு சங்கங்களினதும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்ட பிறகு மக்களின் அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும். இதில் எந்தவொரு அரசியல் தலையீடுகளும் இருக்காது” எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க