வளர்ந்து வரும் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை A அணி

Emerging Teams Asia Cup 2024

65
Emerging Teams Asia Cup 2024

ஓமானில் நடைபெற்றுவரும் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான T20 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை A அணி தகுதிபெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் A அணிக்கு (ஷஹீன்ஸ்) எதிராக ஓமான், அல் அமரத் விளையாட்டரங்கில் இன்று (25) நடைபெற்ற T20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளால் இலங்கை A அணி வெற்றிபெற்றது.

சுழல் பந்துவீச்சாளர் துஷான் ஹேமன்தவின் 4 விக்கெட்டுகள் மற்றும் இளம் வீரர் அஹான் விக்ரமசிங்கவின் அரைச் சதமும், லஹீர உதாரவின் அபார துடுப்பாட்டடும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் A அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வுசெய்தது. அந்த அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒமைர் யூசுப் தவிர எந்தவொரு வீரரும் பிரகாசிக்கவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் A அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் அணிக்காக தனியாளாக துடுப்பாட்டத்தில் போராடிய ஒமைர் யூசுப் 46 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 68 ஓட்டங்கள் குவித்தார்.

இலங்கை A அணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமன்த நான்கு ஓவர்களில் 21 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், நிபுன் ரன்சிக மற்றும் எஷான் மாலிங்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றினர்.

இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை A அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யசோதா லங்கா 10 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனையடுத்து வந்த அஹான் விக்ரமசிங்க, லஹிரு உதாரவுடன் இணைந்து 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை A அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் இலங்கை A அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றியிலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இம்முறை வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான T20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அஹான் விக்ரமசிங்க ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களையும், லஹிரு உதார 43 ஓட்டங்களையும், சஹான் ஆராச்சிகே ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் குவித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 3ஆவது தடவையாக இலங்கை A அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முன்னதாக 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இலங்கை A அணி, குறித்த 2 தொடர்களிலும் சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்தத் தொடர் முழுவதும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டுள்ள துஷான் ஹேமன்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதேவேளை, வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான T20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<