ஆப்கான் கிரிக்கெட் சபையின் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான மொஹமட் ஷெசாத் உடனான ஒப்பந்தத்தை உடன் அமுலுக்குவரும் வகையில் இரத்து செய்வதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும், அதிரடி தொடக்க வீரருமான 32 வயதுடைய மொஹமட் ஷெசாத், ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் பிற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக் ஆட்டங்களிலும் விளையாடி வருகிறார். கடந்த வருடம் சார்ஜாவில் நடைபெற்ற டி-10 கிரிக்கெட் போட்டியில் 16 பந்துகளில் 74 ஓட்டங்களைக் குவித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக மொஹமட் ஷெசாத் விளையாடியிருந்தார். இதில் இரண்டு போட்டிகளில் விளையாடிய ஷெசாத் முழங்கால் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகனில் இருந்து விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்தது.
ஆனால், தான் பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும் கிரிக்கெட் சபை தனக்கு எதிராக செயல்படுவதாகவும் ஷெசாத் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுஇவ்வாறிருக்க, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை மொஹமட் ஷெசாத் தொடர்பில் நேற்று (10) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மொஹமட் ஷெசாத் வெளிநாடுகளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் பங்கேற்பதற்கு கிரிக்கெட் சபையின் அனுமதியை பெறவில்லை.
குளோபல் டி-20 தொடரில் நிலுவை சம்பளத்துக்காக வீரர்கள் போராட்டம்
சம்பள நிலுவை காரணமாக கனடாவில் தற்பொழுது நடைபெற்று வருகின்ற குளோபல் டி-20 தொடரில் களமிறங்க வீரர்கள் மறுத்தது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது….
அத்துடன், பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் அகதிகள் முகாமில் தங்கியிருந்த அவர், அங்கு நடைபெற்ற உள்ளூர் போட்டியில் விளையாடியிருந்தார். தற்போதும் அவர் பாகிஸ்தானில் வசித்து வருகின்றார். எனவே, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் நடத்தை விதிகளை அவர் பலமுறை மீறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக் கிண்ணத் தொடரின் போதும் அவர் ஒழுங்கு நடவடிக்கையை மீறி செயல்பட்டார். இது குறித்த விசாரணையில் பங்கேற்க மொஹமட் ஷெசாத்துக்கு கடந்த மாதம் 20ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த விசாரணைக்கு ஆஜராகவில்லை.
ஆகையால், மொஹமட் ஷெசாத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்கிறோம் எனவும், விரைவில் அவருக்கான தண்டனை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மொஹமட் ஷெசாத்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் என ஆப்கான் கிரிக்கெட் வட்டாரங்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<