ஏ.சி மிலான் அகாடமியின் பயிற்சி முகாம் இலங்கையில்

29

இத்தாலியின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சி அகாடமியான ஏ.சி மிலான் கால்பந்து அகாடமி நடத்தும் கால்பந்து (கனிஷ்ட) பயிற்சிப் பட்டறைகள் மூன்று கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.

5 முதல் 17 வயது வரையிலான சிறுவர் சிறுமியர் இந்த கால்பந்து பயிற்சி பட்டறைகளில் பங்கேற்கலாம். கொழும்பு தடகள மற்றும் கால்பந்து விளையாட்டு கழக அகாடமி இலங்கையில் இந்த கால்பந்து நிகழ்ச்சித் தொடரை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, கொழும்பு பகுதியில் உள்ளவர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்றுமுன்தினம் (31) ஆரம்பமாகியது. இது பெப்ரவரி 5ஆம் திகதி வரை கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெறும். இந்த கால்பந்து பயிற்சிப் பட்டறைகளை நடத்த ஏ.சி.மிலான் கால்பந்து பயிற்சி அகாடமியின் பயிற்சியாளர் டேவிட் பாட்டிஸ்டினி இலங்கைக்குகு வருகை தந்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

125 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட மிலான் கால்பந்து அகாடமி தனது உலகளாவிய கால்பந்து பயிற்சிப் பட்டறைகள் திட்டத்தின் ஓரு பகுதியாக இலங்கையில் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளின் 23 நகரங்களில் அவர்கள் ஏற்கனவே இந்த கனிஷ்ட கால்பந்து பட்டறைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இதுதொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான இத்தாலிய தூதுவர் டமியானோ பிரான்கோவிக், இலங்கையின் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இத்தாலியின் மிகவும் வெற்றிகரமான கால்பந்து கழகம் இணைந்துள்ள இந்த சந்தர்ப்பம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்றார்.

இலங்கையில் உள்ள முன்னணி கால்பந்து பயிற்சியாளர்களின் பங்களிப்பும் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. இலங்கைக்கு பங்களிப்பு வழங்கும் இத்தாலியின் மிலான் விளையாட்டுக் கழகம் அந்நாட்டிலும் ஐரோப்பாவிலும் பணக்கார மற்றும் வெற்றிகரமான கால்பந்து கழகமாக விளங்குகிறது. இதன் தொடக்கம் 1899 ஆம் ஆண்டு வரை நீண்டு செல்கிறது. அதிக உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற கழகமாகவும் அவர்கள் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<