ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள அபு தாபி T10 தொடரின் நொர்தென் வொரியர்ஸ் அணிக்காக இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அபு தாபி T10 தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களுடைய தக்கவைப்பு வீரர்கள் மற்றும் நேரடியாக ஒப்பந்தம் செய்யக்கூடிய வீரர்களின் விபரங்களை வெளியிட்டு வருகின்றது.
>> “இலங்கை ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது எமக்கு சக்தி” – சில்வர்வூட்
அதன்படி, நொர்தென் வொரியர்ஸ் அணியானது தங்களுடைய ஐகொன் வீரராக வனிந்து ஹஸரங்கவை ஒப்பந்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
வனிந்து ஹஸரங்க கடந்த ஆண்டு நடைபெற்ற அபு தாபி T10 தொடரில் வஹாப் ரியாஸ் தலைமையிலான டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
குறித்த தொடரில் டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணி சம்பியனாக முடியசூடியிருந்ததுடன், வனிந்து ஹஸரங்க அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். இவர் 12 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
வனிந்து ஹஸரங்க நொர்தென் வொரியர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை அணியின் மற்றுமொரு வீரரான மதீஷ பதிரண பங்களா டைகர்ஸ் அணிக்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அபு தாபி T10 தொடரில் 6 அணிகள் பங்கேற்பதுடன், இந்தப்போட்டித் தொடரானது எதிர்வரும் நவம்பர் 23ம் திகதி முதல் டிசம்பர் 4ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<