மூன்று நாட்கள் கொண்ட அபுதாபி டி-20 லீக் தொடர் ஓக்டோபரில்

1142

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தமட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், பின்னர் டி-20 போட்டிகளும் அறிமுகமாகியது. அதனைத் தொடர்ந்து தற்போது டி-10 போட்டிகள், 90 பந்துகள் போட்டிகள் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் விளையாடும் நாடுகளின் உள்ளுர் டி-20 லீக் அணிகள் பங்குபற்றும் மூன்று நாட்கள் கொண்ட டி-20 போட்டித் தொடரொன்றை நடத்துவதற்கு அபுதாபி கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அபுதாபி டி-20 தொடர் என முதன்முறையாக நடத்தப்படும் இந்தப் போட்டித் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை அபுதாபியின் ஷெயிக் சயீட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்கம் தொடர்பான செயலி ஒன்றினை வெளியிட்டுள்ள ஐ.சி.சி

ஏழு லீக் சுற்று ஆட்டங்களைக் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் A அணி உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கின்றன.

இந்தத் தொடரை நடத்துவதற்கு ஐ.சி.சி இன் பூரண அனுமதியும், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஆதரவும் கிடைத்துள்ள நிலையில், எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு இந்த தொடரை நடத்துவதற்கான ஒப்பந்தத்திலும் கையொப்பமிட்டுள்ளது.

அத்துடன், மூன்று மாத காலப்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 3 ஆவது டி-20 போட்டித் தொடராகவும் இது அமையவுள்ளது. குறித்த காலப்பகுதியில் ஆப்கானிஸ்தான் டி-20 லீக் மற்றும் டி-10 லீக் ஆகிய போட்டித் தொடர்கள் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமின்றி, முன்னதாக நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் டி-20 தொடரைப் போன்று ஐ.சி.சி இன் டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற நாடுகளில் உள்ளுர் டி-20 போட்டிகளில் சம்பியனாகும் அணிக்கு இந்த தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அங்குரார்ப்பண அபுதாபி டி-20 போட்டித் தொடரில் இங்கிலாந்தில் இருந்து யோர்க்ஷயர் வைகிங்ஸ் அணியும் (டி-20 பிளாஸ்ட்), தென்னாபிரிக்காவில் இருந்து டைட்டன்ஸ் அணியும் (ராம் ஸ்லாம் டி-20 லீக்), ஆப்கானிஸ்தானில் இருந்து பூஸ் டிபன்டர்ஸ் அணியும் (சபகீஷா டி-20 லீக்), பாகிஸ்தானில் இருந்து லாகூர் கெலண்டர்ஸ் அணியும் (பாகிஸ்தான் சுப்பர் லீக்), அவுஸ்திரேலியாவில் இருந்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் (பீக் பேஷ் டி-20 லீக்) விளையாடவுள்ளது.

இந்த தொடரில் கிரிக்கெட் உலகின் அதிரடி சிக்ஸர் மன்னரான கிறிஸ் கெய்ல், இங்கிலாந்தின் டைமல் மில்ஸ் மற்றும் கெரி பெலன்ஸ், பாகிஸ்தான் அணியின் யாசிர் ஷாஹ் உள்ளிட்ட வீரர்கள் நட்சத்திர வீரர்களாக பங்கேற்கவுள்ளனர்

தொடர்ந்தும் இலங்கை அணியின் தலைவராக லக்மால்

இந்நிலையில், இப்போட்டித் தொடர் குறித்து அபுதாபி கிரிக்கெட் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆரிப் அல் அவானி கருத்து வெளியிடுகையில்,

”அபுதாபி கிரிக்கெட் சங்கமானது ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிகச்சிறந்த கிரிக்கெட் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியில் களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டித் தொடரை நடத்துவதன் மூலம் இங்கு மேலும் பல சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்.

இதேநேரம், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி டேவிட் ஈஸ்ட் கருத்து தெரிவிக்கையில், இங்கு அனைத்து வசதிகளும் உண்டு. அதேபோன்று கிரிக்கெட் ரசிகர்களும் உள்ளனர். எனவே இவ்வாறான தொடர்களை நடாத்தி அங்கு மேலும் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவுள்ளோம. இந்த தொடரை ஒவ்வொரு வருடமும் நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க