கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று (09) ஆரம்பமாகிய தேசிய கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 18 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி பரந்தாமன் அபிஷாலினி புதிய கனிஷ்ட தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
தேசிய மட்டப் போட்டியில் முதல் தடவையாக பங்குபற்றும் 16 வயதான அபிலாஷினி, 3.15 மீட்டர் உயரம் தாவி அதே பாடசாலையின் முன்னாள் மாணவியான என். டக்சிதாவினால் கடந்த 2019ஆம் ஆண்டு நிலைநாட்டிய தேசிய சாதனையை இவ்வாறு முறியடித்தார்.
இதனிடையே, அவருடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட மதிவாணன் ஷாலினி 2.80 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தையும், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி சிவபாதம் சுவர்ணா 2.70 மீட்டர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
>> தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் இன்று ஆரம்பம்
இந்தப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற மாணவிகளுக்கு கனாதீபனும், வெண்கலப் பதக்கம் வென்ற சுவர்ணாவுக்கு சுபாஷ்கரனும் பயிற்சி அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று நடைபெற்ற 18 வயதின்கீழ் பெண்களுக்கான நீளம் பாய்தலில் மொனராகல நன்னாபுரவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த நெத்மிகா மதுஷானி ஹேரத் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் அவர் 5.98 மீட்டர் உயரத்தைப் பதிவுசெய்தார்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<