சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்த ஏபி.டி.வில்லியர்ஸ்

1008
Image Courtesy - AFP

தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட நட்சத்திரமும் விக்கெட் காப்பாளருமான ஏபி.டி. வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் இருந்து ஓய்வு பெறுவதாக  இன்று (23) அறிவித்திருக்கின்றார்.

34 வயதாகும் டி.வில்லியர்ஸ் தனக்கு சொந்தமாக இருக்கும் செயலி (App) ஒன்றில் வெளியிட்ட காணொளியிலேயே, தான் ஓய்வு பெறுகின்ற செய்தியை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

டி வில்லியர்சின் இந்த அதிரடியான தீர்மானத்தினால், அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளில் தென்னாபிரிக்க அணிக்கு பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்டிருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்

தென்னாபிரிக்க அணிக்கு உலகக் கிண்ணம் ஒன்றை வென்று தரும் கனவில் இருந்த வீரர்களில் ஒருவரான டி வில்லியர்ஸ் இதுவரையில் 114 டெஸ்ட் போட்டிகளிலும், 228 ஒரு நாள் போட்டிகளிலும், 78 T20 போட்டிகளிலும் விளையாடியிருக்கின்றார்.

தனது ஓய்வு பற்றி பேசிய டி வில்லியர்ஸ், “114 டெஸ்ட் போட்டிகள், 228 ஒரு நாள் போட்டிகள், 78 T20 போட்டிகள் என்பவற்றுக்கு பிறகு எனது இடத்தை இன்னொருவருக்கு கொடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கின்றது. நான் போதுமான அளவு எனக்குரிய இடத்தை எடுத்து விட்டேன், உண்மையை சொல்லப்போனால் நான் சோர்ந்து விட்டேன்“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பேசிய அவர், “இது ஒரு கடினமான முடிவு என்பது எனக்குத் தெரியும், நான் நீண்ட காலமாகவே மிகவும் சிரமப்பட்டு (ஓய்வு பெறுவதைப் பற்றி) யோசித்திருந்தேன். கிரிக்கெட் போட்டிகளில்  நன்றாக விளையாடிக் கொண்டிருக்கின்ற வேளையிலேயே ஓய்வை வெளியிட விரும்புகின்றேன்.  அவுஸ்திரேலிய அணிக்கு எதிராகவும், இந்திய அணிக்கு எதிராகவும் மிகச் சிறப்பான தொடர் வெற்றிகளை நாம் அண்மையில் பதிவு செய்திருந்தோம். எனவே, விலகுவதற்கு இதுவே சரியான தருணம்.”

“(இந்த ஓய்வு) வேறு எங்கும் சென்று உழைப்பதை அடிப்படையாக கொண்டது அல்ல. இது வாகனம் ஒன்றுக்கு எரிபொருள் முடிந்தது போன்ற ஒரு விடயம். எனது உள்ளத்தில் சரியான தருணம் இதுவென்றே தெரிகின்றது. எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டன. தென்னாபிரிக்க உட்பட உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் எனக்கு காட்டிய கருணைக்கும், ஆதரவுக்கும் நன்றி. இன்று, உங்கள் புரிந்துணர்வுக்கும் நன்றி.“

“எனக்கு வெளிநாட்டுப் போட்டிகள் எதிலும் விளையாடும் திட்டங்கள் இல்லை. ஆனாலும், தென்னாபிரிக்காவின் உள்ளூர் அணியான டைடன்ஸ் அணிக்கு விளையாட விரும்புகின்றேன். அத்தோடு தென்னாபிரிக்க அணியில் பாப் டு ப்ளெசிசிக்கு மிகப் பெரிய ஆதரவாளராகவும் இருக்க விரும்புகின்றேன்“ எனக் கூறியிருந்தார்.

எந்த வகையிலான சவால்களையும் எதிர்கொள்ள தயராகும் அஞ்செலோ மெதிவ்ஸ்

கிரிக்கெட் உலகில் ஏ.பி.டி. வில்லியர்ஸ் வைத்த பதிவுகள் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கின்றன. ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக பெறப்பட்ட அரைச்சதம் (16 பந்துகள்), சதம் (31 பந்துகள்) மற்றும் 150 ஓட்டங்கள் (64 பந்துகள்) என்பவற்றுக்கு சொந்தக்காரராக மாறி டி வில்லியர்ஸ் உலக சாதனை படைத்திருந்தார்.

இது தவிர, தென்னாபிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டியொன்றில் அதிகூடிய ஓட்டங்கள் (278*) பெற்ற வீரராகவும் டி வில்லியர்ஸ் இருப்பதோடு ஐ.சி.சி. இன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் தென்னாபிரிக்கா சார்பாக அதிக தரைநிலைப் புள்ளிகள் (935) பெற்றவராகவும் இருக்கின்றார்.

டி வில்லியர்ஸ், இதுவரையில் டெஸ்ட் போட்டிகளில் 50.66 என்ற அதி சிறந்த துடுப்பாட்ட சராசரியுடன் 8,675 ஓட்டங்களை (22 சதம் உட்பட) குவித்திருப்பதுடன் ஒரு நாள் போட்டிகளில் 53.50 என்ற சராசரியுடன் 9,577 ஓட்டங்களைக் குவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<