கடந்த 2018ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற, தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஏபி.டி. வில்லியர்ஸ் மீண்டும் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது உறுதியில்லை எனத் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஏபி.டி. வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தீடிர் ஓய்வினை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் இரசிகர்கள் மட்டுமில்லாது, கிரிக்கெட் உலகில் உள்ள அனைத்து இரசிகர்களும் அதிர்ச்சியடைந்த விடயமாக அமைந்தது.
இந்நிலையில், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் புதிய ப யிற்றுவிப்பாளர் மார்க் பௌச்சரின் அறிவுரைக்கு அமைய ஏபி.டி. வில்லியர்ஸ் இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் T20 உலகக் கிண்ணம் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் எனத் தகவல்கள் வெளியாகியன.
எனினும், உலகில் தற்போது பாரிய பிரச்சினையாக இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் நடைபெறுவதில் சிக்கல்கள் உருவாகியிருக்கின்றது. இந்த கொரோனா வைரஸ் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டே ஏபி.டி. வில்லியர்ஸ் உம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீள்வது உறுதியில்லை எனக் கூறியிருக்கின்றார்.
தனது நாட்டில் வெளியாகும் ”ரப்போர்ட்” என்னும் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் ”(கொரோனா வைரஸினால்) அடுத்த ஆறு மாதங்களுக்கு எதிர்காலத்தினை என்னால் பார்க்க முடியவில்லை. ஒருவேளை இந்த கிரிக்கெட் தொடர் (T20 உலகக் கிண்ணம்) அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்படுமானால் நிறைய விடயங்கள் மாறியிருக்கும். இப்போது நான் (விளையாட) தயாராக இருக்கின்றேன். ஆனால், (அடுத்த ஆண்டு) எனது உடல் அதனை எப்படி பார்க்குமோ தெரியாது. அதோடு, (அப்போது) எனது உடல்நிலையும் எப்படி இருக்குமோ தெரியாது.” எனக் குறிப்பிட்ட வில்லியர்ஸ் தான் மீள்வருவதற்கான வாக்குறுதியினை தென்னாபிரிக்க நாட்டின் பயிற்சியாளர் மார்க் பௌச்சரிற்கு அளித்து பொய்யான எதிர்பார்ப்புக்களை உருவாக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணம் மூலம் ஏபி.டி. வில்லியர்ஸ் தென்னாபிரிக்க அணிக்காக மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்ப்பு ஒன்று வெளியாகியிருந்த போதிலும் பின்னர் அது பொய்யாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், ஏபி.டி. வில்லியர்ஸ் தான் தென்னாபிரிக்க அணிக்கு இணைய வேண்டும் எனில், தனக்கு நூறு சதவீத பங்களிப்பினை வழங்கக் கூடிய ஆற்றல் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, அப்படியான ஒரு சந்தர்ப்பம் இருந்தால் மாத்திரமே தென்னாபிரிக்க அணிக்காக மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்பதில் உறுதியாக இருக்கின்றார்.
”நான் எதிர்பார்ப்பது போன்று நான் 100 சதவீதம் நன்றாக இருப்பேன் என்றால், நான் விளையாடத் தயார். ஆனால், அப்படி இல்லை எனில் நான் விளையாடத் தயார் இல்லை. நான் 80 சதவீதத்தினை மட்டும் வெளிப்படுத்தக் கூடிய ஒரு ஆள் கிடையாது. நான் தயார் என்றால் எனது தயார் நிலையை எனது (பயிற்சியாளர்) பௌச்சரிடம் நிரூபிக்க வேண்டும்.”
”என்னை அவர்கள் நான் இன்னொருவரினை விட நன்றாக செயற்பாடுகின்றேன் என்பதற்காகவே (அணிக்குள்) எடுக்க வேண்டும். ஏனென்றால், நான் விரும்பியதற்காக ஒரு விடயத்தினை பெற்றுக் கொள்ள நினைக்கும் ஆள் கிடையாது.”
தென்னாபிரிக்க அணிக்காக இதுவரை 420 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கும் ஏபி.டி.வில்லியர்ஸ் 20,000 இற்கு மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<