சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் பாகிஸ்தானில் நடைபெறுவதற்கு உதவும் வகையில், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ், அங்கு நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரின் இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஓவரின் ஏழாவது பந்தில் ஆட்டமிழந்த வீரர்
கிரிக்கெட் விளையாடும் நாடுகளை பொருத்தவரை, சர்வதேச கிரிக்கெட்…..
இலங்கை கிரிக்கெட் அணியின் மீது கடந்த 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதை சர்வதேச கிரிக்கெட் அணிகள் தவிர்த்து வருகின்றன. எனினும், கடந்த இரண்டு வருடங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சர்வதேச போட்டிகளை தங்களுடைய சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் சில போட்டிகளை சொந்த நாட்டில் நடத்தி வருகின்றது.
இவ்வாறான நிலையில், தென்னாபிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஏபி.டி. வில்லியர்ஸ், பாகிஸ்தானுக்கு மீண்டும் கிரிக்கெட்டை கொண்டு செல்ல உதவும் நோக்கில், எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் நடைபெறும் பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடருடன் ஓய்வை அறிவித்த வில்லியர்ஸ், சர்வதேச ரீதியில் நடைபெறும் T20 லீக் போட்டிகளில் பங்கேற்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின், லாஹுர் கெலண்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், முதலில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஏழு லீக் போட்டிகளில் மாத்திரம் விளையாடுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது லாஹுர் அணிக்காக 9 லீக் போட்டிகளில் விளையாடுவதாக தெரிவித்துள்ள இவர், குறித்த லீக் போட்டிகளுடன் நாடு திரும்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் சுப்மான் கில், விஜய் சங்கருக்கு வாய்ப்பு
இந்திய அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஹர்திக்….
இதுதொடர்பில் வில்லியர்ஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில், மார்ச் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் லாஹுர் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் நான் விளையாடவுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன். அத்துடன், கடாபி அரங்கிற்கு மீண்டும் செல்வதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
கிரிக்கெட் விளையாட்டானது பாகிஸ்தானின் இரண்டாவது மதம் என்பதை நான் நம்புகிறேன். முக்கியமாக கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் ரசிகர்கள் எமக்கு அளித்த ஆதரவையும் பாராட்டுகளையும் நான் இன்னும் மறக்கவில்லை. அதேநேரம், இப்போது சர்வதேச கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு திரும்புவதற்கு நான் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன். அதுமாத்திரமின்றி எனது வருகை ஒரு சிறிய ஊக்குவிப்பாகவும் அமையலாம்.
அதேநேரம், பாகிஸ்தான் ரசிகர்களுக்காக நான் இரக்கப்படுகிறேன். காரணம் அவர்கள் எந்தவித தவறுகளையும் செய்யவில்லை. அவர்களால் சர்வதேச போட்டிகளை நேரடியாக பார்க்க முடியவில்லை. ஆனால், பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் மீண்டும் வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என நான் நினைக்கிறேன். சர்வதேச கிரிக்கெட் மீண்டும் பாகிஸ்தானுக்கு வரும், அப்போது ரசிகர்கள் முழு மைதானத்தையும் நிரப்பி விடுவார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<