டி வில்லியர்ஸிற்கு சத்திர சிகிச்சை

11794
AB De villiers

உலக கிரிக்கெட் அரங்கில் 360 பாகை என்று அழைக்கப்படும் தென் ஆபிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் முழங்கையில் ஏற்பட்ட காயத்திற்காக அடுத்த வாரம் சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்ள உள்ளார். இதனால் அவுஸ்திரேலிய அணியுடனான தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

தென் ஆபிரிக்க அணியின் முன்னணி நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆனால் இதுவரை அவர் காயம் காரணமாக ஒரு போட்டியில் இருந்து கூட விலகியதில்லை. கடந்த மாதம் நியூசிலாந்து அணி தென் ஆபிரிக்க மண்ணில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையடியது.

இந்த தொடருக்கு முன் டி வில்லியர்ஸின் முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் முதன் முறையாக நியூசிலாந்து தொடருக்கான தென் ஆபிரிக்க அணியில் இருந்து  காயம் காரணமாக டி வில்லியர்ஸ் விலகினார். அவரது காயம் குணமடைய சுமார் நான்கு தொடக்கம் ஆறு  வாரங்கள் ஆகும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

தென் ஆபிரிக்க அணி எதிர்வரும் 30ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வரை அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான அணியில் டி வில்லியர்ஸ் இடம்பிடித்திருந்தார். நேற்று காலை டி வில்லியர்ஸ் தனது உடல் தகுதியை நிரூபிக்கும் போது காயம் ஏற்பட்ட இடத்தில் வலி ஏற்பட்டதாக உணர்ந்தார்.

இதனால் அடுத்த வாரம் சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். அதன் பின் குறைந்தது 8 வாரங்கள் அல்லது 10 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் அவுஸ்திரேலிய அணிக்கு  எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும், தென் ஆபிரிக்க அணி அவுஸ்திரேலியா சென்று விளையாட இருக்கும் டெஸ்ட் தொடரில் இருந்தும் டி வில்லியர்ஸ் விலகியுள்ளார்.

பிரிட்டோரியா நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயது நிரம்பிய ஆபிரஹாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ் 2004ஆம் ஆண்டு போர்ட் எலிசபத் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது உலக கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்தார். தான் ஆடிய முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி முதல் இனிங்ஸில் 28 ஓட்டங்களையும் 2ஆவது இனிங்ஸில் 14 ஓட்டங்களையும் அவர் பெற்றிருந்தார்.

அதன் பிறகு தனது 12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில், ஏபி டி வில்லியர்ஸ் தற்போது வரையில் 106 டெஸ்ட் போட்டிகளில் பங்குப்பற்றி, 176 இனிங்ஸ்களில்த துடுப்பெடுத்தாடி 50.46 என்ற துடுப்பாட்ட சராசரியில் மொத்தமாக 8074 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் ஆகக் கூடுதலான ஓட்டமாக 2010ஆம் ஆண்டு அபுதாபியில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் பெற்ற 278 ஓட்டங்கள் பதிவாகியது.

அத்தோடு ஏபி டி வில்லியர்ஸ் தனது டெஸ்ட் வாழ்வில் 21 சதங்கள் மற்றும் 39 அரைச்சதங்களை பூர்த்தி செய்துள்ளதோடு 933 பவுண்டரிகள் மற்றும் 57 சிக்ஸர்களை விளாசியும் உள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.

பலரால் விரும்பப்படும் தனது அபார, வித்தியாசமான ஆட்டத்தால் அனைவரினதும் மனதில் இலகுவில் இடம்பிடிக்கும் திறன் கொண்ட டி வில்லியர்ஸ் டெஸ்ட் அரங்கில் இறுதியாக ஜனவரி மாதம் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்குபற்றி இருந்தார். ஆனால் அந்த போட்டியின் 2 இனிங்ஸ்களிலும் அவர் ஓட்டங்கள் எதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து இருந்தமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தென் ஆபிரிக்க குழாம்

பெப் டு பிளிஸ்சிஸ் (தலைவர்), கைல் அபாட், ஹசிம் அம்லா, பர்ஹான் பெஹார்டீன், குயிண்டன் டி கொக், ஜோன் போல் டுமினி, இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், ஆரோன் பாங்கிசோ, எண்ட்லி பெலுக்வாயோ, காகிஸோ ரபடா, ரீலி ரூசோ, தப்ரய்ஸ் ஸம்ஸி, டேல் ஸ்டெய்ன்