தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏபி டி வில்லியர்ஸ், IPL தொடரில் மீண்டும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் (RCB) இணையவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
IPL தொடரில் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த வில்லியர்ஸ், கடந்த ஆண்டுடன் IPL தொடரில் விளையாடுவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருந்தார். அதேநேரம், குறித்த ஆண்டு விராட் கோஹ்லி அணியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகியிருந்தார்.
>> IPL இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்ற குஜராத்!
இந்தநிலையில், விராட் கோஹ்லி வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் வில்லியர்ஸ் அடுத்த ஆண்டு மீண்டும் RCB அணியுடன் இணைந்துக்கொள்வார் என குறிப்பிட்டுள்ளார். “நான் வில்லியர்ஸை அதிகமாக தவறவிடுகின்றேன். அவர் தற்போது அமெரிக்காவில் உள்ளார். நான் தொடர்ச்சியாக அவரிடம் பேசுகின்றேன். வில்லியர்ஸ் தொடர்ந்தும் RCB அணியை அவதானித்து வருகின்றார். எனவே அடுத்த ஆண்டு மீண்டும் RCB அணியுடன் அவர் இணைந்துக்கொள்வார் என நினைக்கின்றேன்” என விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.
வில்லியர்ஸ் அடுத்த ஆண்டு RCB அணியின் வீரராக இணைவாரா? என்பது தொடர்பிலான அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஒரு சிலவேளைகளில் பெங்ளூர் அணியின் ஆலோசகராக வில்லியர்ஸ் செயற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், இதுதொடர்பான உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
ஆனால் RCB அணியுடன் அடுத்த ஆண்டு இணைந்துக்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளதாக வில்லியர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். “எனது வருகை தொடர்பில் விராட் கோஹ்லி உறுதிசெய்துள்ளமை தொடர்பில் பெருமையடைகிறேன். நான் அடுத்த ஆண்டு RCB அணியுடன் இணைந்துக்கொள்வேன். ஆனால், எவ்வாறான பணியுடன் என்பது தொடர்பில் இதுவரை முடிவாகவில்லை.
அடுத்த ஆண்டு சில போட்டிகள் பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறும் என அறியக்கிடைத்தது. எனது இரண்டாவது இல்லமான பெங்களூரில் முழுமையான ரசிகர்கள் அடங்கிய மைதானத்தை பார்வையிடுவதற்கு ஆவலாக உள்ளேன்” என வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
ஏபி டி வில்லியர்ஸ் ஒட்டுமொத்தமாக கடந்த 2008ம் ஆண்டு முதல் 184 IPL போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 3 சதங்கள் மற்றும் 40 அரைச்சதங்கள் அடங்கலாக 5162 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<