T20I சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வினை அறிவித்திருக்கும் அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான ஆரோன் பின்ச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெறுகின்றார்.
பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி த்ரில்லர் வெற்றி
அவுஸ்திரேலிய அணிக்காக T20I போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த துடுப்பாட்ட வீரராக காணப்படும் ஆரோன் பின்ச், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் ஆஸி. அணியின் முன்னணி துடுப்பாட்டவீரராக கடந்த காலங்களில் வலம் வந்ததோடு, அணித்தலைவராகவும் பொறுப்பு வகித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒருநாள் சர்வதேசப் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பின்ச் ஓய்வினை அறிவித்திருந்த போதும் அடுத்த T20 உலகக் கிண்ணம் வரை ஆஸி. அணியினை வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் திடீர் முடிவு மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆரோன் பின்ச் ஓய்வு பெற்றுள்ளார்.
அதன்படி சுமார் 12 வருடங்களாக ஆஸி. கிரிக்கெட் அணியின் வீரராக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்துள்ள ஆரோன் பின்ச் தனது ஓய்வு குறித்து இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
“2024 இல் நடைபெறும் அடுத்த T20 உலகக் கிண்ணம் வரை என்னால் விளையாட முடியாது என்கிற உண்மையினை உணர்ந்திருக்கின்றேன். எனவே இதுவே (ஓய்வுக்கான) சிறந்த தருணம் எனக் கருதுவதோடு, அணியை அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தயார்படுத்துவதற்கான நேரத்தை வழங்குகின்றேன்.”
மொத்தமாக 103 T20I போட்டிகளில் ஆடியிருக்கும் ஆரோன் பின்ச் அதில் 76 போட்டிகளில் ஆஸி. அணியின் தலைவராக செயற்பட்டிருப்பதோடு 3120 ஓட்டங்களை 34.28 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் குவித்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் ஆரோன் பின்ச்சே T20I போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்களை (172) பெற்ற துடுப்பாட்டவீரராகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக பின்ச் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிய போட்டி T20 உலகக் கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணியுடனான மோதலாக அமைந்திருந்ததோடு, அதனை அடுத்த ஆப்கான் அணியுடனான போட்டியில் பின்ச் காயம் காரணமாக பங்கேற்காமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை அதிரடியால் மீட்ட தசுன் ஷானக
அதேவேளை, ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 2021 இல் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் வெற்றியாளர்களாக முதல் தடவை மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும் ஆரோன் பின்ச் உள்ளூர் T20 போட்டிகள் மற்றும் பிக் பேஷ் லீக் (BBL) தொடர் என்பவற்றில் தொடர்ந்து விளையாடுவார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<