சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்துவகையான போட்டிகளிலும் தங்களுக்கென்ற தனித்துவமான பாணியில் விளையாடி வெற்றிகளை குவித்த இலங்கை அணி, தற்போது வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை குவிக்க போராடி வருகின்றது.
வெளிநாட்டு மண்ணில் இலங்கை அணி பெறும் தோல்விகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் அதேநேரம், சொந்த மண்ணிலும் இலங்கை அணியின் பிரகாசிப்புகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை.
உபாதைகளால் தள்ளாடும் இலங்கை கிரிக்கெட் அணி
நாம் உள்ளூரில் நடைபெறும் போட்டிகளை தவிர்த்து, வெளிநாட்டில் நடைபெறும் போட்டித் தொடர்களை பார்க்கும் போது, இலங்கை அணியின் வெற்றி சதவீதம் மிகவும் சொற்பமானதாகவே உள்ளது.
ஒரு காலத்தில் எதிரணிகளை அவர்களுடைய சொந்த மண்ணில் பந்தாடிய வரலாறு இலங்கை அணிக்கு உள்ளது. இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற முன்னணி அணிகளுக்கும் அவர்களுடைய சொந்த மண்ணில் சவாலான அணியாக இலங்கை அணி விளங்கியிருந்திருக்கிறது.
ஆனால், கடந்த தசாப்தத்தின் பாதியை கடந்த பின்னர் இலங்கை அணியின் பிரகாசிப்புகள் மிகவும் வீழ்ச்சியடைந்துவருகின்றது. குறிப்பாக மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகியோரின் ஓய்வுக்கு பின்னர் இலங்கை அணி இன்றளவும் முன்னேறிவரும் அணியாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுவரை மூன்று வகையான போட்டிகளிலும் தங்களுக்கென ஒரு சரியான பதினொருவரை கண்டறிந்து முன்னேறிய அணியாக தங்களை அடையாளப்படுத்தவில்லை.
குறிப்பாக 2015ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணியில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பயிற்றுவிப்பாளர்களில் மாற்றங்கள், வீரர்களில் மாற்றங்கள் மற்றும் அணித்தலைவர்களில் மாற்றங்கள் என பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் மேற்குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பின்னர் 8 அணித்தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில், திமுத் கருணாரத்ன தலைமையில் மாத்திரமே இலங்கை அணி 55 சதவீதத்துக்கும் அதிகமான வெற்றி சதவீதத்தை கொண்டுள்ளது. இவரைத்தவிர்த்து, தினேஷ் சந்திமாலின் தலைமையிலான வெற்றி சதவீதம் 54ஆகவும், அஞ்செலோ மெதிவ்ஸின் தலைமயில் 49 சதவீதம் வெற்றியையும் பெற்றிருக்கிறது.
ஏனைய அணித்தலைவர்களுக்கு கீழ், இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் வெறும் 35 சதவீதத்துக்கும் குறைவான வெற்றி சதவீதத்தையே பெற்றிருக்கிறது. எனவே, இவ்வாறான தலைவர்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் இலங்கை அணியின் பின்னடைவுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
அந்த வகையில் 8 தலைவர்களின் மாற்றத்துக்கு மத்தியில், 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி, வெளிநாட்டு மண்ணில் விளையாடிய 11 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் இரண்டு தொடர்களில் மாத்திரமே வெற்றியை பதிவுசெய்துள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என கைப்பற்றியதுடன், அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியிருந்தது.
ஒருநாள் தரவரிசையில் மிகவும் பின்னடைவில் உள்ள அணிகளை மாத்திரமே கடந்த காலங்களில் வீழ்த்தியிருக்கும் இலங்கை அணி, ஏனைய அணிகளுக்கு எதிராக மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்திருக்கிறது. இறுதியாக இலங்கை அணி மேற்கொண்ட 6 சுற்றுத் தொடர்களில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான ஒரு தொடரில் மாத்திரமே வெற்றியை பெற்றுள்ளதுடன், ஏனைய அனைத்து தொடர்களிலும் மோசமான தோல்விகளை சந்தித்திருக்கிறது.
இருதரப்பு தொடர்களில் மொத்தமாக 41 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி கடந்த 2015ம் ஆண்டுக்கு பின்னர் விளையாடியுள்ளது. இந்த 41 போட்டிகளில், 30 தோல்விகளை சந்திதிருப்பதுடன், வெறும் 7 போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளதுடன், வெற்றி சதவீதம் 29 இற்கும் குறைவாக உள்ளமை இலங்கை அணியின் பின்னடைவை அச்சிட்டு காட்டுகிறது.
இதற்கு முன்னர் 2010 தொடக்கும் 2015ம் ஆண்டு காலப்பகுதிக்குள் இலங்கை அணி 10 ஒருநாள் தொடர்களில் விளையாடி 4இல் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு தொடரை சமப்படுத்தியுள்ளது. பங்களாதேஷ், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்தியதுடன், மற்றுமொரு அவுஸ்திரேலிய தொடரை 2-2 என சமப்படுத்தியிருக்கிறது.
இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்திய அணிக்கு எதிரான தொடரை (2014-15) மாத்திரமே 5-0 என இலங்கை அணி இழந்திருக்கின்ற போதும், 2015ம் அண்டுக்கு பின்னர், 6 தொடர்களில் எந்தவொரு போட்டி வெற்றியும் பெறாமல் பூஜ்ஜியம் என்ற நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்திருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கான காரணம் என்ன என்பதை இதுவரையிலும் யாராலும் புரிந்துக்கொள்ள முடியவில்லை. வீரர்களிடம் திறமை இல்லையா? என கேட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், தோல்விகளுக்கு மத்தியில் இலங்கை அணி பெற்ற சிறு சிறு வெற்றிகளும் மிகச்சிறந்த அணிகளுக்கு எதிராக பெறப்பட்டிருக்கின்றன.
ஓரிரண்டை எடுத்துக்கொண்டால், 2017ம் ஆண்டு சம்பியன் கிண்ணத்தில் இந்திய அணிக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றி மற்றும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் சம்பியனாகிய இங்கிலாந்து அணிக்கு எதிரான பெற்ற வெற்றி. இவை இரண்டும் இங்கிலாந்து மண்ணில் பெறப்பட்டதுடன், குறித்த இரண்டு அணிகளும் தங்களுடைய முழு பலமான அணியுடன் இலங்கை அணியை எதிர்கொண்டிருந்தன.
அப்படி பார்க்கும் போது, இலங்கை அணியில் திறமையான வீரர்கள் உள்ளார்கள் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. அப்போது ஏன் இந்த தோல்விகள்? காரணம், வீரர்களிடம் திறமை இருக்கின்ற போதும், தொடர்ச்சியாக அவர்கள் அதனை வெளிப்படுத்த தவறுகின்றனர். ஒரு போட்டியில் பிரகாசிக்கும் வீரர், அடுத்தப்போட்டியில் பிரகாசிக்க தவறுகின்றார்.
சர்வதேசத்தில் உள்ள ஏனைய அணிகளை எடுத்துக்கொண்டால், அணிக்கு ஓரிரண்டு வீரர்கள் தொடர்ச்சியாக பிரகாசித்து வருகின்றனர். அதனால், அவர்கள் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாகின்றது. ஆனால், இலங்கை அணியில் இது தொடர்ந்தும் நடப்பதில்லை. துடுப்பாட்ட வீரர்களின் பல ஆட்டமிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தேவையில்லாத சந்தர்ப்பங்களில், தேவையில்லாத துடுப்பாட்ட முறைகள் கையாளப்படுகின்றன.
நீச்சலில் ஆரம்பமாகி இலங்கை கிரிக்கெட் அணிக்கு வந்த ரமேஷ் மெண்டிஸ்
பந்துவீச்சாளர்கள் தொடர்ந்தும் நேர்த்தியாக பந்துவீச தவறுகின்றனர். இதனால், மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. களத்தடுப்பு மற்றும் உடற்தகுதியில் பல்வேறு சிக்கல்கள். களத்தடுப்பின் காரணமாக இலங்கை அணியின் பல வெற்றிகள் கைநழுவியதை நாம் பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறோம். அனுபவ வீரர்கள் அணிக்கு தேவை என்பதை தொடர்ந்தும் கவனத்தில் வைத்தாலும், அனுபவ வீரர்கள் அதற்கேற்ற வகையில் செயற்படுவதில்லை. அவர்களின் பங்களிப்பு அணிக்கு சரியாக கிடைக்கின்றதா? என்பதிலும் கேள்விக்குறிதான்.
இந்த தருணமானது இலங்கை அணி மாற்றத்தை கொண்டுவரவேண்டிய தருணம். பல்வேறு கிரிக்கெட் அணிகளும் அவர்களுக்கென்ற பாணியை பயன்படுத்தி வெற்றிகளை பெற்றுக்கொள்கின்றனர். அதேபோன்ற பாணி எமது இலங்கை அணிக்கும் உள்ளது. எமது கிரிக்கெட் பாணியை வைத்து, நாம் வெற்றிபெற்ற சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன. அடுத்த அணிகளை பார்த்து நாம் முன்னேற வேண்டியதில்லை. எமது பலத்தையும், பாணியையும் வைத்துக்கொண்டு வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான சக்தி எம்மிடம் இருக்கிறது. அதற்கான இளம் வளமும் நம்மிடம் இருக்கின்றது.
நாம் 3-0 என இறுதியாக மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வியடைந்த போதும், எம்மிடம் சில நல்ல வளமான வீரர்கள் இருப்பதை பார்த்தோம். வனிந்து ஹசரங்க, பெதும் நிசங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் அஷேன் பண்டார போன்ற வீரர்கள் எமக்கான வளம். அனுபவ வீரர்கள் சோபிக்க தவறிய போதும், அவர்களின் ஆட்டம் நம்பிக்கைக்குறியது.
எனவே, புதிதாக எழுந்துவரும் இளம் வீரர்களைக்கொண்டு இலங்கை அணி முன்னேறவேண்டும். இளம் வீரர்களுக்கான சரியான வழிகளை காட்டி அனுபவ வீரர்கள் அவர்களை அழைத்துச்செல்ல வேண்டும். இலங்கை அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என எவரும் கூறவில்லை. எதிரணிகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் திறமையை வெளிப்படுத்தவும், இலங்கை கிரிக்கெட் அணி என்றால், இலகுவாக வெற்றியை தாரை வார்க்கும் அணி அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டும் என்பதுதான் இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…