காலியில் நடைபெறும் இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவடையும்போது 446 ஓட்டங்களால் பின்தங்கி இருக்கும் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்திய அணி முதல் இன்னிங்சுக்காக 600 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், சோபிக்கத் தவறி வரும் இலங்கை அணியில் நுவன் பிரதீப்பின் பந்து வீச்சு மாத்திரமே குறிப்பிட்டு கூறும்படியாக இருந்தது. இலங்கை அணியின் நான்கு முன்னணி பந்து வீச்சாளர்களும் 130 இற்கும் அதிகமான ஓட்டங்களை விட்டுக் கொடுத்தது வரலாற்றில் இது நான்காவது சந்தர்ப்பமாகும்.
2011ஆம் ஆண்டு தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய நுவன் பிரதீப் இன்றைய தினம் வரை, தான் விளையாடிய 24 டெஸ்ட் போட்டிகளின் 46 இன்னிங்சுகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. முதல் நாள் ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இறுதியில் 132 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இமாலய இலக்குடன் ஆடும் இலங்கை அணி பாரிய நெருக்கடியில்
“நான் நல்ல ஆரம்பத்தைப் பெறவில்லை. தொடர்ந்து பந்துவீசும் போது சிறப்பாக வீச முடியும் என்று நினைத்தேன். என்னால் சிறப்பாக பந்துவீச முடிந்தது. நான் ஆறு அல்லது ஏழு முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தேன். இதுவே நான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சந்தர்ப்பம். இந்த இலக்கை எட்ட முடிந்ததை எண்ணி நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பிரதீப் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பிரதீபின் 6 விக்கெட்டுகளில் இரண்டு விக்கெட்டுகள் நேர்த்தியான பௌன்ஸர் பந்துகளால் வீழ்த்தப்பட்டன. நேற்றைய தினம் ”உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர்” என வர்ணிக்கப்படும் விராட் கோஹ்லியின் விக்கெட்டை பௌன்ஸர் பந்தில் வீழ்த்திய பிரதீப் இன்றைய தினத்தில் அவ்வாறானதொரு பந்தில் ரவிச்சந்திரன் அஷ்வினை வெளியேற்றினார்.
பிரதீப், வழமையாக பௌன்ஸர் பந்துகளை வீசக்கூடியவர் எனினும், தற்போது அவரது பௌன்ஸர் பந்துகள் விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு நேர்த்தி பெற்றுள்ளன. “நான் வழமை போலவே பௌன்ஸர் பந்துகள் வீசி பயிற்சி பெற்றேன். அந்த வகையில் விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு பௌன்ஸர்கள் பயன்தறுவதாக மாறியுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
இரண்டாவது நாளில் இந்திய அணியின் கடைசி 7 விக்கெட்டுகளையும் 177 ஓட்டங்களுக்குள் வீழ்த்த முடிந்ததால் இந்திய அணியை 600 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த முடிந்துள்ளது. எனினும் இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த இரண்டு தினங்கள் எடுத்துக் கொண்டது குறித்து பிரதீப் மகிழ்ச்சி அடையவில்லை.
“எம்மால் மகிழ்ச்சி அடைய முடியாது. எமது பல திட்டங்கள் மோசமாக முடிந்தன. நாம் புதிய திட்டங்களை செயற்படுத்தியபோதும் அவை எப்போதும் சிறப்பாக இருக்காது. கிரிக்கெட் விளையாட்டு அப்படியானதுதான், அதற்கு ஏற்றவாறு செயற்பட வேண்டும். குறைந்தது நாம் அவர்களை 600 ஓட்டங்களுக்கேனும் மட்டுப்படுத்த முடிந்தது” என்று நுவன் பிரதீப் குறிப்பிட்டார்.
அசேல குணரத்ன துடுப்பெடுத்தாட வர முடியாத நிலையில் இலங்கை அணி பொலோ ஓன்னை (Follow on) தவிர்ப்பதற்கு இன்னும் 4 விக்கெட்டுகளே எஞ்சி இருக்கும் நிலையில் 247 ஓட்டங்களைப் பெற வேண்டி உள்ளது. தனது 27ஆவது அரைச் சதத்தை பெற்ற அஞ்செலோ மெதிவ்ஸ{டன் களத்தில் தனது ஆட்டத்தை தொடங்கி இருக்கும் டில்ருவன் பெரேரா இருவருமே இலங்கை அணியின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளனர்.
இலங்கை அணியின் புதிய வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளர் சமிந்த வாஸ் அணியின் செயற்பாடு மற்றும் மூன்றாவது நாள் ஆட்டத்தின் திட்டங்கள் பற்றி கருத்து வெளியிடும்போது, “எந்த ஒரு அணியும் 600 ஓட்டங்களை பெறும்போது எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தம் ஏற்படும். எப்படி இருந்தபோதும் நாம் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடவில்லை. சில துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தார்கள். அது ஒரு அணியாக சகித்துக்கொள்ள முடியாத ஒன்று – ஆனால் அது ஆட்டத்தின் இயல்பு. தற்போதைய நிலையில் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் டில்ருவன் பெரேரா நன்றாக துடுப்பெடுத்தாடுகின்றனர். எனவே நாளைய தினத்தில் அவர்கள் விக்கெட்டில் நிலைத்திருந்து பகல் போசன இடைவேளை வரை துடுப்பெடுத்தாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். தேநீர் இடைவேளை வரை துடுப்பெடுத்தாட முடியுமென்றால் ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். முதல் இரண்டு மணிநேரத்தில் நன்றாக துடுப்பெடுத்தாட வேண்டும் – அதுவே எமது இலக்காகும்” என்று கருத்து தெரிவித்தார்.