சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் ஹோல் ஒஃப் பேமாக (ICC Hall of Fame) பெயரிடப்பட்ட இலங்கையின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வாவுக்கு முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அரவிந்த டி சில்வா நான்காவது வீரராக ஹோல் ஒஃப் பேமில் ஒருவராக இணைந்துள்ளார்.
>> சம்பியன்ஷ் கிண்ண வாய்ப்பை இழந்தமை தொடர்பில் கூறும் மஹேல
அரவிந்த டி சில்வா ஹோல் ஒஃப் பேமாக பெயரிடப்பட்டமை தொடர்பில் மஹேல ஜயவர்தன கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதம் பின்வருமாறு,
“ஐசிசி ஹோல் ஒஃப் பேமில் நான்காவது இலங்கையர் என்ற முறையில் உங்களை வரவேற்பதில் பெருமை அடைகிறேன். நான், குமார் சங்கக்கார அல்லது முத்தையா முரளிதரன் என ஏற்கனவே அங்கிருக்கும் எங்கள் மூவரில் யாரிடமாவது நீங்கள் கேட்டால், முதலில் நீங்கள்தான் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வோம்.
நாங்கள் அனைவரும் உங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். நீங்கள் சாதித்தவற்றால் ஈர்க்கப்பட்ட ஒரு தலைமுறையின் ஒரு பகுதியாக இருந்தோம். எனக்கு ஒன்பது அல்லது 10 வயது இருக்கும் போது, நான் உங்களை முதன்முதலில் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது நீங்கள் இலங்கை அணியில் புதிய குழந்தையாக இருந்தீர்கள், ஆனால் நீங்கள் சிறந்த துடுப்பாட்ட வீரராக இருந்தீர்கள். சிறு குழந்தைகளாகிய நாங்கள் அனைவரும் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதைப் பார்த்து, எங்களுடைய ஆட்டத்தை மாற்ற முயற்சித்தோம்.
என்னிடம் பயிற்சியாளர்கள் இருந்தனர், அவர்கள் என்னை ஒரு குறிப்பிட்ட வழியில் விளையாடச் பணித்தார்கள், ஆனால் நீங்கள் மாற்றத்தின் முக்கியத்துவத்தைக் காட்டியுள்ளீர்கள். உங்களுடைய துடுப்பாட்ட ஸ்டான்ஸையும் (Batting Stance), இருத்தலையும் நீங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தேன். இது கடினமான ஒன்று. ஆனால் அது உங்களின் கிரிக்கெட் புத்திசாலித்தனத்தின் அடையாளமாக இருந்தது. அதனை நான் பின்னர் அறிந்துக்கொண்டேன்.
நிச்சயமாக, 1996இல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நீங்கள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, அற்புதமான ஆட்டமிழக்காமல் சதம் அடித்தமை நினைவிருக்கிறது. என்னுடைய 18 வயதில், அந்த வார இறுதியில் நான் பெரும் சமர் இறுதிப் போட்டியில் பங்கேற்றேன். சனிக்கிழமையன்று, நாங்கள் நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் பேர் இருந்திருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் நீங்கள் பங்கேற்ற இறுதிப் போட்டியை இலங்கையில் உள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
>> தோல்வியுடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்த இலங்கை அணி
இறுதிப்போட்டியை பார்வையிட நாங்கள் எங்கள் ஆட்டத்தை சீக்கிரம் முடித்துவிட்டோம், நாங்கள் எங்கள் டிவிகளில் ஒட்டிக்கொண்டோம். நீங்கள் உள்ளே நுழைந்தபோது, நாங்கள் இரண்டு விக்கெட்டுக்கு 23 ஓட்டங்கள் என போராடிக்கொண்டிருந்தோம், ஆனால் உங்கள் கண்களில் உறுதியை காண முடிந்தது. அரையிறுதிப் போட்டியிலும், இந்தியாவுக்கு எதிராகப் தடுமாற்றத்தில் இருந்தபோது, தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தீர்கள்.
இறுதிப்போட்டியில் நீங்கள் எப்படி கட்டுப்பாட்டை எடுத்தீர்கள் என்பதை நான் எப்போதும் நினைவில் கொள்கிறேன். கவர் ட்ரைவ்ஸ், புல்ஸ் மற்றும் பிளிக்ஸ் என மூன்றாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தின் போது நீங்கள் ஷேன் வோர்னை எப்படி கையாண்டீர்கள் என்பது நம்பமுடியாததாக இருந்தது. நாங்கள் இரவு வரை தெருக்களில் கொண்டாடினோம். அந்த நினைவுகளை நான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.
நீங்கள் உங்கள் காலத்தை விட ஒரு தலைமுறைக்கு முன்னால் இருந்த ஒரு வீரர். மிகவும் ஆக்ரோஷமான மற்றும் வேகப்பந்து வீச்சை அந்த இலங்கை வரிசையில் உள்ள அனைவரையும் விட சிறப்பாக விளையாடியவர். அவுஸ்திரேலியாவில், அவர்கள் எப்போதும் இலங்கையர்களை மிரட்ட முயற்சிப்பார்கள், ஆனால் அவர்களால் உங்களோடு போட்டியிட முடியாது. நீங்கள் எப்போதும் அவர்களை வீழ்த்துவீர்கள். தரமான அவுஸ்திரேலியத் தாக்குதலுக்கு எதிரான இறுதிப் போட்டியில் உங்களுடைய இன்னிங்ஸைப் பார்த்து, இதுவே நாங்கள் விளையாட வேண்டிய கிரிக்கெட் முறை, நாங்கள் திறமையானவர்கள் என்ற நம்பிக்கையை என் தலைமுறைக்கு அளித்தது. உலகில் யாரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை நீங்கள் எங்களுக்குத் தந்தீர்கள்.
ஒரு வருடத்திற்கு நீங்கள் மற்றும் உலகக் கிண்ணத்தை வென்ற மற்ற வீரர்களுடன் நான் உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொண்டேன். நான் முற்றிலும் வியப்படைந்தேன். எனது டெஸ்ட் அறிமுகத்தின் முதல் நாளில், நான் உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தேன், அங்கு அனைவரும் அவரவர் இடங்களில் இருந்தனர்.
>> ஐசிசியின் உயரிய விருதை பெறவுள்ள அரவிந்த டி சில்வா
என்னுடைய இடத்தை நான் கண்டறிய சுற்றிப்பார்த்தேன். நான் அதிர்ஷ்டசாலி – உங்களிடமிருந்து இரண்டு இடங்கள் தள்ளி ஒரு நாற்காலி இருந்தது. அதிலிருந்து, நான் கிரிக்கெட்டைப் பற்றி பேச விரும்பிய ஒருவர் நீங்கள் என்பதை உணர்ந்தேன். நான் உங்களிடம் கேள்விகளைக் கேட்க வேண்டியிருந்தது உங்களுடைய அறிவை பெற வேண்டியிருந்தது. அன்று முதல் நான் அதைத்தான் செய்தேன். என்னுடைய முதல் போட்டியில் உங்களுடன் இணைந்து துடுப்பெடுத்தாடினேன். இதன்போது இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுக்கு 952 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்த போது அதனை நான் பெருமையாக கருதினேன்.
குமார் சங்கக்கார ஓட்டங்கள் அடிப்படையில் முன்னிலையில் இருக்கலாம் ஆனால் நீங்கள் எங்களில் யாரிடமாவது கேட்டால், இலங்கை இதுவரை உருவாக்கிய சிறந்த துடுப்பாட்ட வீரர் நீங்கள்தான். இலங்கை கிரிக்கெட்டில் உங்கள் தாக்கத்தை ஈடுகட்ட முடியாது, நீங்கள் எங்களுக்கு வழி காட்டியுள்ளீர்கள்.
உங்களுடன் ஸ்லிப் திசையில் களத்தடுப்பில் செயற்பட்டதும் ஒரு கல்வியாக இருந்தது. நீங்கள் வழக்கமாக முதல் ஸ்லிப்பில் நிற்பீர்கள், துடுப்பாட்ட வீரர் எவ்வாறு சிறப்பாக ஆடுகிறார் என்பதைப் பற்றி நாங்கள் பேசுவோம். துடுப்பாட்ட வீரரின் பலவீனத்தை நீங்கள் விவரிப்பீர்கள். எங்கள் பந்துவீச்சாளர்களில் ஒருவர் அவரை எப்படி வெளியேற்ற முடியும் என்பதை கோடிட்டுக் காட்டியது எனக்கு நினைவிருக்கிறது. சமிந்த வாஸ் பந்தை உள்ளே கொண்டு வருவார், நீங்கள் கூறியது போன்று நடக்கும். அது வசீகரமாக இருந்தது.
உங்கள் கழக அணியினர் எப்போதும் உங்களுடன் களமிறங்கும் மகிழ்ச்சியான நேரத்தைக் கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. சங்கக்கார நீங்கள் என்.சி.சி. கழகத்தில் இருந்த காலக்கதைகளை கூறியபோது நான் எவ்வளவு சிரித்தேன் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நாங்கள் ஒன்றாக உடைமாற்றும் அறையில் இருந்த காலத்திலிருந்து நான் உறுதியளிக்கக்கூடிய ஒன்று எப்போதுதே மந்தமான தருணம் இருக்காது. ஆனால் நிகழ்வுகளுக்கு (partying) வரும்போது உங்களுடன் தொடர்ந்து இருக்க முடியாது என்று நான் விரைவில் அறிந்தேன்.
>> ICC இன் உறுப்புரிமையை இழந்த இலங்கை கிரிக்கெட்
ஆடுகளத்தில் தேசிய அணிப் பணிக்கு வரும் போது, நீங்கள் எவ்வளவு கடுமையாக இருக்கிறீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. உடற்தகுதி கலாச்சாரத்துடன் உண்மையில் வளர்ந்த முதல் தலைமுறை நாங்கள் தான். விளையாட்டு தொடர்ந்து மெழுகேறி வருவதால், அதன் முக்கியத்துவத்தை நீங்கள் எங்களுக்கு வலியுறுத்தியது எனக்கு நினைவிருக்கிறது.
ஐசிசி ஹோல் ஒஃப் பேமின் உங்கள் இடத்திற்கு நீங்கள் முழுமையாக தகுதியானவர், இப்போது நாங்கள் நான்கு பேர் அங்கு இலங்கைக் கொடியை பறக்கவிட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இலங்கை கிரிக்கெட் சரித்திரத்தில் உங்களது இடம் உறுதியானது, மேலும் எனது கிரிக்கெட் வாழ்க்கையிலும், வெளியிலும் நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்திற்கு என்னால் போதுமான நன்றி சொல்ல முடியாது” என மஹேல ஜயவர்தன தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<