தற்போது தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் டெஸ்ட் தொடரில், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக ஓட்டங்களை குவிப்பதில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இத்தொடரின் ஒரு இன்னிங்சில் கூட இலங்கை அணியினால் 300 ஓட்டங்களிற்கு மேல் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவரையில் இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமே அரைச்சதமும் தாண்டியுள்ளனர். இவ்வாறாக எதிர்மறையான விடயங்களே இத்தொடரில் இலங்கை அணியினால் அதிகம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இந்நிலையில், ஒன்று இரண்டு சாதகமான விடயங்களும் இத்தொடரில் வெளிப்படுத்தபட்டே இருக்கின்றது என்பதனையும் மறுக்க முடியாது. அவற்றில் ஒன்று, முன்னரை விட செம்மையாகியிருக்கும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலின் பந்து வீச்சு.
ஹம்பாந்தோட்டையினை பிறப்பிடமாக கொண்ட வேகப்பந்து வீச்சாளர் லக்மாலுக்கு எதிர்வரும் மார்ச் மாதத்துடன் 30 வயது பூர்த்தியாகின்றது. இத்தொடரில் அவர் நீண்ட ஓவர்களை வீசி தென்னாபிரிக்க அணியினை கட்டுப்படுத்தும் வகையிலான பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்ததன் காரணமாக, அவரால் இத்தொடரில் இதுவரை 12 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியுமாக இருந்துள்ளது. அத்துடன் இந்த தொடரில், இதுவரை அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திலும் (ககிஸோ ரபாடா-14, வெர்னோன் பிலாந்தர்-13) லக்மால் இருக்கின்றார்.
கேப் டவுன் நகரில் இறுதியாக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில், 69 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த லக்மால், முன்னதாக போர்ட் எலிசபெத்தில் இடம்பெற்றிருந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் தடவையாக தனது டெஸ்ட் வாழ்க்கையில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலைக் காலத்திலேயே, லக்மாலின் திறமையினை இனங்கண்டிருந்த இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்கள் அவரிற்கு உடனடியாக சிரேஷ்ட அணியின் குழாமில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருந்தனர். லக்மாலின் அதிக உயரம் பந்துகளை இலகுவாக பவுண்ஸ் (Bounce) செய்வதற்கு ஏதுவாக இருந்ததுடன், அவரது திறமை மூலம் பந்துகளை கச்சிதமாக ஸ்விங் (Swing) செய்தது பயிற்றுவிப்பாளர்களையும் அப்போது திறமை மிக்க வீரர்களை இனங்காண்பதற்காக பொறுப்பேற்றிருந்த, சந்திக்க ஹதுருசிங்கவையும் கவர்ந்தது. இதனையடுத்து 2009 இல் இலங்கை A அணி தென்னாபிரிக்காவிற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தினை வெற்றிகரமாக கைப்பற்றியதன் காரணமாக சுரங்க லக்மாலிற்கும் இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்திவ்சிற்கும் ஒரு சிறப்பான இடம் கிடைத்திருந்தது.
ஆறு வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் ஆகியிருந்த லக்மால், நேர்த்தியான முறையில் பந்து வீச்சுக்களை மேற்கொண்டிருப்பினும், அவற்றை போட்டியை தீர்மானிக்கும் ஒன்றாக மாற்றுவதில் தோல்வியையே சந்தித்து இருக்கின்றார். பின்னர், தமிழ்யூனியன் கழகத்தின் தலைவராக செயற்பட்டிருந்தது அவருக்கு உதவியாக இருந்தாலும், பந்து வீச்சுப்பாணியில் லக்மால் மேற்கொண்டிருந்த சிறு மாற்றம் காரணமாக, முன்னர் தேர்வாளர்களினால் அவர் நிராகரிக்கப்பட்டிருந்தார்.
“(இம்முறை) நான் எனது பந்து வீச்சுப் பாணியில் சிறுமாற்றத்தினை மேற்கொண்டுள்ளேன். எனது பழைய காணொலிகளை (Video) பார்த்து பயிற்றுவிப்பாளர் ஒருவரின் துணையுடன் அவற்றினை ஆராய்ந்து இலங்கையில் இருக்கும் போதும், இங்கே (தென்னாபிரிக்கா) வந்ததன் பின்னரும் பயிற்சிகளில் அந்த மாற்றத்தினை செய்ய மும்முரமாக ஈடுபட்டேன். இப்பயிற்சிகளின் போது என்னால் பந்தினை அதிகம் ஸ்விங் செய்ய முடியும் என்பது எனக்கு புலனாகியது. அதுவே அந்த மாற்றம்” என்று லக்மால் தெரிவித்தார்.
இன்னும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“பந்து வீசும் போது எனது கையானது சற்று முன்னதாகவே வளைந்து விடுகின்றது. அதனை நேராக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்து அதனை தற்போது சரி செய்துவிட்டேன். தற்போது பந்தானது அடிக்கடி (தரையில் படும் போது) அதில் இருக்கும் நூல்கள் ஓட்டும் இடத்தில் பட்டு இரண்டில் ஒரு வழியில் (உள்ளாகவோ/வெளியாகவோ) வெளியேற முடியுமாக இருக்கின்றது.”
இத் தொடரில், ரபடா மணிக்கு 145 கிலோமீட்டரிற்கு மேலான வேகத்தில் பந்து வீசியிருப்பதோடு, இலங்கையின் லஹிரு குமார மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் மணிக்கு 140 கிலோமீட்டரிற்கு மேலான வேகத்தில் பந்து வீசியிருக்கின்றனர்.
ஆனால், குறைவான வேகத்திலேயே பந்து வீசும் லக்மாலுக்கு, பந்தினை ஸ்விங் செய்யும் திறமையே அவரது வெற்றிக்கு கைகொடுத்திருக்கின்றது.
“(இத்தொடரில்) எனது பந்து வீசும் வேகத்தில் எந்த மாற்றமும் இருந்திருக்கவில்லை, நான் இதுவரை அதி வேகமாக பந்து வீசியதும் கிடையாது. பந்து வீசும் வேகத்தினை விட துடுப்பாட்ட வீரரிற்கு பந்தின் அசைவு காரணமாக அது செல்லும் திசையினை தீர்மானிக்க முடியாமல் கடினமாக்குவதே சிறப்பு. இருப்பினும் இரண்டில் ஒரு வழியில் பந்து வீசுவது முக்கியமானதே, நான் அவற்றை கட்டுப்படுத்துவதற்குரிய வேலைப்பாடுகளினையும் மேற்கொண்டிருந்தேன். அதுவே எனக்கு விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் பெரும் உதவியாக இருந்தது.“
என்று தனது கருத்தினை மேலும் கூறிமுடித்தார் லக்மால்
இதுவரை பல போட்டித்தொடர்களை கடந்து வந்திருக்கும் லக்மாலுக்கு இந்த தொடரே நடைபெற்றவற்றில் முக்கியமானதொன்றாக இருக்கின்றது. ஆனால், இத்தொடரிற்கு முன்னதாக தேர்வாளர்களினைப்பற்றிய பயம் தனக்கு இருந்ததாகவும் லக்மால் குறிப்பிட்டிருந்தார்.
“நான் இங்கு (தென்னாபிரிக்காவிற்கு) வந்தபோது பாரிய சவால் ஒன்றினை எதிர்கொண்டிருந்தேன். ஏனெனில், இலங்கை அணியின் தேர்வாளர்களினாலும் இலங்கை கிரிக்கெட் சபையினாலும் ஒரு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் மூத்த வேகப்பந்துவீச்சாளராக சில காலம் இருந்து அதன் மூலம் பெற்றுக்கொண்ட நற்பெயரை இழக்கவும் விரும்பியிருக்கவில்லை, அது இலங்கை அணியில் தற்போது இருக்கும் இளம் வீரர்களிற்கும் நல்லதொரு விடயமாக அமையாது. நான் இந்த தொடரில் சிறப்பாக செயற்படவில்லை எனில், இத்தொடரின் பின்னர் டெஸ்ட் குழாமில் இருக்க போவதில்லை எனும் முடிவினையும் எடுத்து வைத்திருந்தேன். எனது பந்து வீச்சு பற்றி தவறாக யாரும் பேசுவதை என்னால் கேட்கமுடியாது. இதன் காரணமாகவே நூறுவீத பங்களிப்பினை இப்போட்டித்தொடரில் எவ்விடத்திலும் நான் வழங்கியிருந்தேன். “
தற்போது தான் வைத்த இலக்குகளை அடைவதற்கான ஆற்றலினை கொண்டிருக்கும் லக்மால், அதனை இன்னும் உயர்த்துவதற்காக செயற்படபோவதாகவும் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“இப்போட்டித்தொடரிற்கு வருவதற்கு முன்னர் குறைந்தது 15 விக்கெட்டுகளையாவது வீழ்த்த வேண்டும் என்ற ஒரு இலக்குடன் இருந்தேன். அதனை பயிற்சியாளர்களிடம் தெரிவித்தும் இருந்தேன். அப்படி செய்ய முடியும் எனில் இத்தொடரனாது எனக்கு வெற்றிகரமான ஒன்றாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இருந்திருக்காது. ஆனால், (மூன்றாவது போட்டி ஆரம்பமாக முன்னரே) நான் இதுவரை 12 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கின்றேன். இதனால் எனது இலக்கினை 18 அல்லது 20 விக்கெட்டுகளாக தற்போது அதிகரித்துள்ளேன். அதனை அடைவதற்குரிய தன்னம்பிக்கையினையும் கொண்டுள்ளேன்“ என்றார்.