இலங்கை நிதி ஐ.சி.சி இனால் இடை நிறுத்தம்

189

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டுக்கு வழங்கப்படும் நிதியின் அடுத்த கட்ட நிதி வழங்கப்படமாட்டாது என சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

 

இலங்கை கிரிக்கெட்இ சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளை மீறி இடைக்கால நிர்வாகசபையை நியமித்தமையே இதற்கான காரணம் என கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்க மாற்றதின்படி விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற நவீன் திசாநாயக்க இந்த மாற்றங்களை செய்தார். சித்தார்த் வெத்தமுனியின் தலைமையில் இலங்கை கிரிக்கெட் அமைப்பில் உள்ள ஊழல்களை களையும் வரை தேர்தல் நடத்துவதில்லை எனக்கூறி 9 பேர் அடங்கிய புதிய இடைக்கால நிர்வாக சபையை தெரிவு செய்து ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தினார். சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளின் படி ஒரு நாட்டின் கிரிக்கெட் அமைப்பு அரச தலையீடுகள் இல்லாமல் சுயாதீனமாக நடைபெற வேண்டும் என்பதே. புதிய இடைக்கால நிர்வாக சபை அறிவிப்பின் போது இந்த விடயம் தொடர்பாக சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்று அதிகாரிக்கு அறிவித்ததாகவும்இ இதுதொடர்பாக சர்வதேசக் கிரிக்கெட் பேரவையுடன் பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் நவீன் திசாநாயக்க கூறி இருந்தார். கடந்த காலங்களில் அரச தலையீட்டுடன் இடைக்கால நிர்வாக சபைகள் மாற்றப்பட்டதாகவும் அதற்கு சர்வதேசக் கிரிக்கெட் பேரவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள் எனவும் அவர் தனது நம்பிக்கையை வெளியிட்டு இருந்தார். சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் கீழ் இயங்கும் கிரிக்கெட் சபைகள் விதிமுறைகளின் கீழ் நடக்காவிட்டால்இ சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அந்த சபைகளை தடை செய்யும் அளவுக்கு நடவடிக்களை மேற்கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அமைச்சரிடம் முழுமையான சரியான விளக்கத்தை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை கோரியுள்ளது. அமைச்சரின் விளக்கம் சர்வதேசக் கிரிக்கெட் பேரவைக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் சிலவேளைகளில் இந்த நிர்வாகம் தொடர வாய்ப்புகள் கிடைக்கும். இல்லாவிட்டால் உடனடியாக தேர்தல் நடத்தவேண்டிய நிலையம் உருவாகலாம்.