வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசிரியார் கல்லூரி அணிகளிற்கிடையிலான 108ஆவது பொன் அணிகளின் சமர் இன்று நிறைவிற்கு வந்திருக்கின்றது.
இவ்வருடம் முதல் முறையாக 3-நாள் போட்டியாக இடம்பெற்ற இந்த பெரும் சமரில் யாழ்ப்பாணக் கல்லூரி அணியினர், அணியின் தலைவர் சிதம்பரலிங்கம் மதுசனின் 11 விக்கெட்டுகளின் உதவியுடன் ஐந்து தசாப்தங்களின் பின்னர் யாழ்ப்பாணக் கல்லூரி கிண்ணத்தை தமதாக்கியுள்ளது.
>>எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகும் 108வது பொன் அணிகளின் சமர்<<
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸில் 153 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டனர். கடந்த சமரில் அரைச்சதம் கடந்திருந்த றொய்ஸ் ஜோன்சன் இம்முறையும் அரைச்சதம் (61 ஓட்டங்கள்) கடந்திருந்தார். விஷ்ணுகோபன் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். பந்துவீச்சில் எவோன் 3 விக்கெட்டுக்களை சாய்க்க மதுசன், பிரியங்கன் மற்றும் சாருசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தனர்.
பத்திரிசியார் கல்லூரி அணி தமது முதலாவது இன்னிங்ஸில் யாழ்ப்பாண கல்லூரியை விட 14 ஓட்டங்கள் அதிகமாக 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் அபிலாஷ், ஆதித்யா, மற்றும் மதுசன் முறையே 28, 27 மற்றும் 20 ஓட்டங்களினையும், பிரியங்கன் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர். பந்துவீச்சில் மதுசன் 5 விக்கெட்டுக்களையும், விஷ்ணுகோபன் மற்றும் ஹரிஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
தமது இரண்டாவது இன்னிங்ஸிற்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி கபிசனின் 35 ஓட்டங்கள் மற்றும் மதுசனின் 32 ஓட்டங்களின் உதவியுடன் 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். சாருசன் 4 விக்கெட்டுக்களையும் பிறேமநாயகம் மதுசன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
146 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பத்திரிசியார் கல்லூரியின் விக்கெட்டுக்களை வேகமாக சாய்த்த யாழ்ப்பாண கல்லூரியின் மதுசன் மற்றும் விஷ்ணுகோபன் 86 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் சாய்து வரலாற்று வெற்றியினை யாழ்ப்பாண கல்லூரிக்கு பெற்றுக்கொடுத்தனர்.
- Photos – St. Patrick’s College, Jaffna vs Jaffna College – 108th Battle of the Golds | Day 1
- Fan Photos – St. Patrick’s College, Jaffna vs Jaffna College – 108th Battle of the Golds | Day 2
பத்திரிசியார் கல்லூரிக்காக அணியின் தலைவர் பற்குணம் மதுசன் 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். மதுசனை தவிர ஏனைய வீரர்கள் எவரும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை என்பது பத்திரிசியார் கல்லூரிக்கு பாரிய ஏமாற்றம்.
யாழ்ப்பாண கல்லூரிக்காக இந்த போட்டியில் அணியின் தலைவர் சிதம்பரலிங்கம் மதுசன் 68 ஓட்டங்களிற்கு 11 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததுடன், 44 ஓட்டங்களினையும் பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியுடன், இதுவரை இடம்பெற்றிருக்கின்ற பொன் அணிகளின் சமரில், 35 போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியும், 17 போட்டிகளில் யாழ்ப்பாணக் கல்லூரி அணியும் வெற்றிபெற்றிருக்கின்றது. 30 போட்டிகள் சமநிலையில் நிறைவு பெற்றிருக்கின்றன, ஒரு போட்டி கைவிடப்பட்டிருக்கின்றது.
சுருக்கம்
யாழ்ப்பாண கல்லூரி
முதலாவது இன்னிங்ஸ் 153/10 (68.2), ஜோன்சன் 61, ஏவோன் 3/17
இரண்டாவது இன்னிங்ஸ் – 159/10 (87.1), கபிசன் 35, சி. மதுசன் 32, சாருசன் 4/45, பி. மதுசன் 3/25
புனித பத்திரிசியார் கல்லூரி
முதலாவது இன்னிங்ஸ் – 167/10 (65.3), அபிலாஷ் 28, ஆதித்யா 27, சி. மதுசன் 5/45
இரண்டாவது இன்னிங்ஸ் – 86/10 (35.3), பற்குணம் மதுசன் 35, சி.மதுசன் 6/23, விஷ்ணுகோபன் 3/43
முடிவு – 60 ஓட்டங்களால் யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<