பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமரில் அதிரடி மாற்றம்

Introduction of Three-Day Matches to School Cricket

56
big match

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டுக்கு வீரர்களை பழக்கப்படுத்தும் நோக்கில் இலங்கையின் முன்னணி பாடசாலைகளில் வருடாந்தம் நடத்தப்படும் இரண்டு நாட்கள்; ‘பிக் மேட்ச்’ என்றழைக்கப்படுகின்ற மாபெரும் கிரிக்கெட் சமரை மூன்று நாட்கள் கொண்ட போட்டிகளாக நடத்த இலங்கை கிரிக்கெட் சபை நிதியுதவி வழங்குகிறது.

இதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள 28 பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர் தொடர்கள் மூன்று நாட்கள் கொண்ட போட்டிகளாக நடைபெறவுள்ளது.

அத்துடன், இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் 56 பாடசாலைகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபையினால் நிதியுதவி வழங்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த ‘பிக் மேட்ச்’ போட்டிகள் மூலம் தேசிய கிரிக்கெட் அணிக்கு வரும் வீரர்களுக்கு பாடசாலைக் காலத்திலேயே சகிப்புத் தன்மையை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.

எனவே, இந்த ஆண்டு முதல் மேலதிகமாக சேர்க்கப்பட்ட மூன்றாவது நாளுக்காக பாடசாலைகளுக்கு 125 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.

மூன்று நாட்கள்; கிரிக்கெட் போட்டிகளின் முக்கியத்துவத்தை விளக்கி, இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரை இலங்கையில் நடைபெற்று வந்த பாடசாலைகளுக்கிடையேயான கிரிக்கெட் பாரம்பரியத்தின்படி, 100 ஆண்டுகள் பூர்த்தியடைந்த பின்னரே இந்தப் போட்டிகள் இரண்டு நாட்கள் கொண்ட போட்டிகளாக நடத்தப்பட்டன. ஆனால் இந்த ஆண்டிலிருந்து, அந்த பாரம்பரியம் மாற்றப்பட்டு, வடக்கு-கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களிலும் நடைபெறவுள்ள முக்கிய போட்டிகளும் மூன்று நாட்கள் கொண்ட போட்டிகளாக மாற்றப்படுகின்றன.

13, 15, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் ஆண்டுக்கு அதிக எண்ணிக்கையிலான போட்டிகளை இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்வதாக அந்த சங்கத்தின் தலைவர் திலக் வத்துஹேவா கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

‘பாடசாலை கிரிக்கெட் தொடரில் முதல் பிரிவு, இரண்டாம் பிரிவு மற்றும் மூன்றாம் பிரிவு என மூன்று பிரிவுகளின் கீழ் ஒரு வருடத்தில் சுமார் 6800 பாடசாலை கிரிக்கெட் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் தேசிய அணிக்கு வீரர்களை உருவாக்குவதே எங்களது திட்டமாகும். மூன்று நாட்கள் பாடசாலை கிரிக்கெட் முறையின்படி, பாடசாலைகளுக்கிடையேயான 19 வயதுக்குட்பட்ட முதல் மற்றும் இரண்டாம் பிரிவு கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு முந்தைய சுற்றுகளிலிருந்து இறுதிப் போட்டி வரை மூன்று நாட்கள் கொண்ட போட்டிகளாக நடத்த இலங்கை கிரிக்கெட் சபையும், இலஙகை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கமும் திட்டமிட்டுள்ளது,’ என்று திலக் வத்துஹேவா கூறினார்.

தேசிய மட்டத்திற்கு வீரர்களை அனுப்புவதில் மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் வடிவம் முக்கியமானது என்று இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் முகாமையாளர் ருவன் கல்பகே கூறினார். ‘ஒரு வீரர் முடிவுகளை எடுக்கும்போதும் சவால்களை எதிர்கொள்ளும்போதும் காட்டும் திறமைகளும், அணுகுமுறைகளும் முக்கியம். இந்த போட்டி முறை மூலம் ஒரு வீரருக்குத் தேவையான பல அடிப்படை விடயங்களை அடையாளம் காண முடியும்,’ என்று கல்பகே குறிப்பிட்டார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<