2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் தொடரில் உள்வாங்கப்பட்டிருந்த இந்திய அணி வீரரான ஜஸ்பிரிட் பும்ரா குறிப்பிட்ட தொடரில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>அவுஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு<<
பும்ராவிற்கு அவுஸ்திரேலிய போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது ஏற்பட்ட முதுகு உபாதை சீராகததன் காரணமாகவே அவர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஆடும் வாய்ப்பினை இழக்கின்றார்.
அதேநேரம் பும்ராவின் பிரதியீட்டு வீரராக இளம் வேகப்பந்து சகலதுறைவீரரான ஹர்சித் ரனா பெயரிடப்பட்டுள்ளார். பும்ரா இந்திய அணி பங்கெடுக்கும் இங்கிலாந்து ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியிலும் உள்வாங்கப்பட்ட நிலையிலையே அவர் தொடர்பிலான சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
மறுமுனையில் சுழல்பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிற்கான இந்திய அணியில் யஷாஸ்வி ஜெய்ஸ்வாலினை பிரதியீடு செய்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஜெய்ஸ்வால் தற்போது இந்திய அணியின் மேலதிக வீரர்களில் ஒருவராக சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிற்கு பயணமாகின்றார்.
அதேநேரம் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிற்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுடன் மொஹமட் சிராஜ் மற்றும் சிவம் துபே ஆகியோரும் மேலதிக வீரர்களாக காணப்படுகின்றனர். எனினும் இந்த மூன்று வீரர்களும் இந்திய அணியுடன் போட்டிகளுக்காக பயணிக்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>இலங்கை – ஆஸி. ஒருநாள் தொடருக்கான டிக்கெட் விலைகள் அறிவிப்பு<<
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி தமது அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் ஆடவிருப்பதோடு, குழ A இல் காணப்படும் இந்தியா தமது முதல் போட்டியில் பங்களாதேஷினை இம்மாதம் 20ஆம் திகதி எதிர்கொள்ளவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
சம்பியன்ஸ் கிண்ண இந்திய குழாம்
ரோஹிட் சர்மா (தலைவர்), சுப்மான் கில் (துணை தலைவர்), விராட் கோலி, ஸ்ரேயாஷ் அய்யர், கே.எல். ராகுல், ரிசாப் பாண்ட், ஹார்திக் பாண்டியா, அக்ஷார் பட்டேல், வோஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்சித் ரனா, மொஹ்ட். சமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திரா ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<