யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான இந்துக்களின் பெருஞ்சமர் என்ற இரு நாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் 14ஆவது சமரில், சபர்ணனின் அபார பந்துவீச்சின் உதவியுடன் 64 ஓட்ங்களால் யாழ் இந்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியானது யாழ் இந்துக் கல்லூரிக்கு கிடைத்திருக்க கூடிய தெடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும்.. இந்த வெற்றியுடன் தெடரின் வெற்றி கணக்கில் 4:3 என யாழ் இந்துவினர் முன்னிலை பெற்றுள்ளனர்.
>>14 ஆவது இந்துக்களின் சமரில் யாழ் இந்துக் கல்லூரி முன்னிலையில்!
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்துக் கல்லூரி அணி 172 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸிற்காக பெற்றுக்கொண்டனர். அதிகபட்சமாக அன்ரன் விமல்தாஸ் விதுசன் 49 ஓட்டங்களையும், கிருஷ்ணராஜன் பரேஷித் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர்கள் யுவராஜ் 4 மற்றும், தேஸ்கர் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.
முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி கொழும்பு அணியினர் 91 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டனர். அதிகபட்சமாக தவகுமார் சந்தோஷ் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். பந்துவீச்சில் நித்தீஸ் 4 விக்கெட்டுக்களையும், சுபர்ணன் மற்றும் விதுசன் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
இதில் 81 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸிற்கு துடுப்பெடுத்தாடுவதற்கு ஆரம்பித்த யாழ் இந்துக் கல்லூரி அணி பரேஷித் பெற்றுக்கொடுத்த 39 ஓட்டங்களின் உதவியுடன் முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவில் 16 ஓவர்களில், இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 72 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
>>Photos – Jaffna Hindu College vs Hindu College Colombo – Battle of the Hindus 2025 | Day 1
இரண்டாம் நாள் ஆட்டத்தினை ஆரம்பித்த விதுசன் மற்றும் சுபர்ணன் முறையே 26 மற்றும் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட கொழும்பு இந்துவின் சுழற்பந்து வீச்சாளர்கள் விரைவாக விக்கெட்டுக்களை சாய்க்க 110 ஓட்டங்களிற்கு 8 விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர் யாழ் இந்துவினர். 9ஆவது விக்கட்டுக்காக 50 ஓட்டங்களினை பகிர்ந்தனர் அபிவர்ணன், ஶ்ரீவத்சன் இணை. ஶ்ரீவத்சன் 26 ஓட்டங்களுடன் ஆட்மிழக்க 170 ஓட்டங்களிற்கு 9 விக்கெட்டுக்களை இழந்திருந்த வேளையில் தமது ஆட்டத்தினை இடைநிறுத்தினர். 252 என்கிற வெற்றியிலக்கினை கொழும்பு இந்துவிற்கு நிர்ணயித்தனர். பந்துவீச்சில் தேஸ்கர் மற்றும் யுவராஜ் தலா 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தனர்.
நான்காவது இன்னிங்ஸில் 252 என்கிற சவாலான வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடுவதற்கு களம் நுழைந்த இந்துக் கல்லூரி கொழும்பு அணிக்கு சிறந்ததொரு ஆரம்பத்தினை வழங்கினர் யதுர்சன் மிதுசன் இணை. அணி 49 ஓட்டங்களை பெற்ற வேளையில் 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார் மிதுர்சன்.
தவகுமார் சந்தோஷ், ஶ்ரீ நிதுசன் ஆகியோர் தலா 16 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க மறுமுனையில் நிதானமாக ஆடிய மிதுஷிகன் அரைச்சதம் கடந்தார்.
ஒரு கட்டத்தில் 110 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்த கொழும்பு இந்து அணியினரிற்கு ஒரு முனையில் மிதுஷிகன் 72 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாட மறுமுனையில் விக்கெட்டுக்களை சாய்த்தனர் சுபர்ணன், நித்தீஸ் இணை. அணி 164 ஓட்டங்களை பெற்றிருந்த போது மிதுஷிகன் ஆட்டமிழந்தார்.
அணி 187 ஓட்டங்களை பெற்ற வேளையில், அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சர்விஷ் 39 பந்துகளில் 39 ஓட்டங்களை பெற்றிருக்கையில் சுபர்ணனின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த இரண்டு பந்துகளிலும் இரு விக்கெட்டுக்களை சாய்த்த சுபர்ணன் ஹட்றிக் பெறுதியுடன் யாழ் இந்துவின் வெற்றியினை உறுதிசெய்தார்.
சுபர்ணன் 58 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களினை கைப்பற்றி இந்துக்களின் சமரில் யாழ் இந்துக் கல்லூரியின் தெடர்ச்சியான மூன்றாவது வெற்றிக்கு வழிசமைத்தார்.
விருதுகள்
- போட்டின் நாயகன் – சுதர்சன் சுபர்ணன் ( யாழ். இந்து)
- சிறந்த துடுப்பாட்ட வீரர் – சுரேஷ்குமார் மிதுஷிகன் (கொழும்பு இந்து)
- சிறந்த பந்துவீச்சாளர் – விஸ்வநாதன் யுவராஜ் (கொழும்பு இந்து)
- சிறந்த களத்தடுப்பாளர் – ப்ரித்திகன் ( யாழ். இந்து)
போட்டிச்சுருக்கம்
- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
முதலாவது இன்னிங்ஸ் – 172/10 43.5 ஓவர்கள்
அன்ரன் விமல்தாஸ் விதுசன் 49, கிருஷ்ணராஜன் பரேஷித் 20 விஸ்வநாதன் யுவராஜ் 4/27, பத்மநாதன் ஸ்ரீ நிதுசன் 2/24, இராமநாதன் தேஸ்கர் 2/39
- இந்து கல்லூரி, கொழும்பு
முதலாவது இன்னிங்ஸ் – 91/10 32.5 ஓவர்கள்
தவகுமார் சந்தோஷ் 42, கனகராஜ் நித்தீஷ் 4/12, அன்ரன் விமல்தாஸ் விதுசன் 2/13, சுதர்சன் சுபர்ணன் 2/30
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
இரண்டாவது இன்னிங்ஸ்– 170/9d 54 ஓவர்கள்
கிருஷ்ணராஜன் பரேஷித் 39, அபிவர்ணன் 27, ஶ்ரீ வத்சன் 26, அன்ரன் விமல்தாஸ் விதுசன் 25, இராமநாதன் தேஸ்கர் 4/35, விஸ்வநாதன் யுவராஜ் 4,47
இந்து கல்லூரி, கொழும்பு
இரண்டாவது இன்னிங்ஸ் – 187/10 55.5 ஓவர்கள்
சுரேஷ்குமார் மிதுஷிகன் 72, சுரேஷ் சர்விஷ் 39, தேவேந்திரன் யதுர்சன் 25, சுதர்சன் சுபர்ணன் 6/58, கனகராஜ் நித்தீஷ் 2/75
முடிவு – யாழ். இந்துக்கல்லூரி 64 ஓட்டங்கள் வித்தியாசாத்தில் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<