14 ஆவது இந்துக்களின் சமரில் யாழ் இந்துக் கல்லூரி முன்னிலையில்!

14th Battle of the Hindus 2025

75

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான இந்துக்களின் பெருஞ்சமர் என்ற இரு நாள் கிரிக்கெட் போட்டி 14ஆவது முறையாக இன்றைய தினம்  யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.  

அடுத்த வருடம் கொழும்பில் இடம்பெறவுள்ள இந்து கல்லூரி கொழும்பினது பவள விழா கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக இந்துக்களின் சமரினையும் கொழும்பில் நடத்துவதற்காக, இம்முறை தொடர்ச்சியான இரண்டாது வருடமாக போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. 

Photos – Jaffna Hindu College vs Hindu College Colombo – Battle of the Hindus 2025 | Day 1

கடந்த வருடம் இடம்பெற்ற 13 ஆவது சமரில் யாழ். இந்துக்கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியிருந்தது. அந்த வெற்றியுடன் இதுவரை இடம்பெற்ற இந்துக்களின் சமரில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளினை பதிவு செய்திருக்கின்ற நிலையில், இது இரு அணிகளிற்கும் முக்கிய போட்டியாக அமைகின்றது. 

இன்று காலை நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். இந்துக் கல்லூரி அணியின் தலைவர் கிருஷ்ணராஜன் பரேசித் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். 

யாழ் இந்துக் கல்லூரிஅணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் பாவண்ணன், பரேசித் ஆகியோரை முறையே 12 மற்றும் 20 ஓட்டங்களோடு ஆட்டமிழப்பு செய்து இந்துக் கல்லூரி கொழும்பினை முன்னிலைப்படுத்தினார் வேகப்பந்து வீச்சாளர் ஶ்ரீ நிதுசன்.   

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சுபர்ணன் (16), சிறிவத்சன் (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க28 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களை பெற்றிருந்தது யாழ் இந்துக் கல்லூரி. மறுமுனையில் மிகவும் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த விதுசன் 49 ஓட்டங்களுடன் இடது கை சுழற்பந்து வீச்சாளர் யுவராஜ்ஜின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் 200 இற்கும் அதிக ஓட்டங்களினை யாழ் இந்துக் கல்லூரி பெறும் எதிர்பார்ப்பு தகர்ந்தது. 

யுவராஜ் தெடர்ந்தும் விக்கெட்டுக்களை சாய்க்க தொடர்ந்தும் விக்கெட்டுக்களை பறிகொடுத்த யாழ். இந்துக் கல்லூரி அணியினர் 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பிரித்திகன், பிரீமிகன் முறையே 14 மற்றும் 12 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, உதுரிகளாக 24 ஓட்டங்கள் கிடைத்திருந்தது. 

பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர்கள் 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தனர். யுவராஜ் 4 மற்றும் தேஸ்கர் 2 விக்கெட்டுக்கள் என சாய்த்திருந்தனர். 

தமது முதலாவது இன்னிங்ஸினை ஆரம்பித்த இந்துக் கல்லூரி கொழும்பு அணியினர் ஆரம்பத்தில் மிக நிதானமாக ஆடி இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில், தேநீர் இடைவேளைக்காக போட்டி இடைநிறுத்தப்பட்டது. 

நாளின் இறுதிக் கால வேளைக்கான முதல் இரண்டு பந்துகளிலும் விக்கெட்டுக்களை சாய்த்த விதுசன் யாழ். இந்துக் கல்லூரி அணியினை மீண்டும் போட்டியில் முன்னிலைக்கு உயர்த்தினார்.42 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த இந்துக் கல்லூரி கொழும்பு அணியினர், ஒரு முனையில் மூன்றாமிலக்க வீரர் தவகுமார் சந்தோஷ் நிலைத்திருக்க மறுமுனையில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.  

திடீர் ஓய்வை அறிவித்தார் அவுஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்

சுபர்ணனின் பந்துவீச்சில் ப்ரீத்திகனின் சிறந்த பிடியெடுப்புக்களின் காரணமாக அடுத்தடுத்து இரு விக்கெட்டுக்களை சாய்த்தனர் யாழ். வீரர்கள். தொடர்ந்து, ஏழாவது விக்கெட்டாக 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த தவகுமார் சந்தோஷினை lbw முறை மூலமாக ஆட்டமிழப்பு செய்தார் வலது கை லெக் ஸ்பின் பந்து வீச்சாளர் நித்தீஸ். அடுத்த 3 விக்கெட்டுக்களையும் நித்தீஸ் சாய்க்க 91 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர் இந்துக் கல்லூரி கொழும்பு அணியினர். 

81 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸிற்கு துடுப்பெடுத்தாடுவதற்கு களம் நுழைந்த யாழ் இந்துக் கல்லூரி அணியின் முதல் விக்கெட் 6 ஓட்டங்களிற்கு சாய்க்கப்பட்ட போதும், 33 பந்துகளில் 39 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்து அதிரடி ஆரம்பம் வழங்கினார் பரேஷித். 

முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவில் 16 ஓவர்களை எதிர்கொண்ட யாழ். இந்துக் கல்லூரி அணியினர் 72 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றனர். களத்தில் அன்ரன் விமல்தாஸ் விதுசன் (20) மற்றும் சுதர்சன் சுபர்ணன் (11) ஆகியோர் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கின்றனர். 

முதலாம் நாள் ஆட்ட நிறைவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 152 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சுருக்கம் 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 

முதலாவது இன்னிங்ஸ் – 172/10 43.5 ஓவர்கள்  

 

அன்ரன் விமல்தாஸ் விதுசன் 49, கிருஷ்ணராஜன் பரேஷித் 20, விஸ்வநாதன் யுவராஜ் 4/27, பத்மநாதன் ஸ்ரீ நிதுசன் 2/24, இராமநாதன் தேஸ்கர் 2/39  


இந்து கல்லூரி, கொழும்பு 

முதலாவது இன்னிங்ஸ் – 91/10 32.5 ஓவர்கள்  

 

தவகுமார் சந்தோஷ் 42, கனகராஜ் நித்தீஷ் 4/12, அன்ரன் விமல்தாஸ் விதுசன் 2/13, சுதர்சன் சுபர்ணன் 2/30  


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 

இரண்டாவது இன்னிங்ஸ்- 72/2 16 ஓவர்கள்  

 

கிருஷ்ணராஜன் பரேஷித் 39, அன்ரன் விமல்தாஸ் விதுசன் 20*, விஸ்வநாதன் யுவராஜ் 1/11,  

முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவில் 152 ஓட்டங்கள் முன்னிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<