மிலானின் ரொசோநேரி அணியும் கொழும்பு அத்லெடிக் கால்பந்து கழகமும் இணைந்து, இள வயதினருக்கான உலகப் பிரபல்யமிக்க AC மிலான் கால்பந்து கழகத்தின் பயிற்சி முகாம்களை இலங்கையில் ஒழுங்கு செய்திருக்கின்றன.
அந்தவகையில் 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று நகரங்களில் மிலான் கழகத்தினுடைய இளையோர் கால்பந்து பயிற்சி முகாம்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் AC மிலான் கழகத்தினால் செயற்படுத்தப்படும் முதல் முயற்சியாகும். இந்த நல்லெண்ண முயற்சி கொழும்பு அத்லெடிக் கால்பந்து கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. அதேநேரம் இந்த திட்டமானது கடந்த ஆண்டு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள 23 நகரங்களில் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வளர்ச்சி என்பது எந்தச் சமூகத்திலும் அதன் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானது; அது மனநலத்தையும் உடல் நலத்தையும் மேம்படுத்துகிறது. இந்த திட்டத்தில் 5 முதல் 17 வயது வரையிலான சிறுவர்கள், சிறுமிகள் பங்குபெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 2025ஆம் ஆண்டின் ஜனவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும், பயிற்சி முகாம்கள் வாயிலாக உள்ளூர் பயிற்சியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த தரப்புகளுக்கான நுட்ப செயலமர்வும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
- இமேஷாவின் கோல் மூலம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற இலங்கை
- பலமிக்க பூட்டானிடம் வீழ்ந்த இலங்கை மகளிர் அணி
AC மிலான் கழகத்தின் துணைத் தலைவர் பிராங்கோ பாரேசி இந்த பயிற்சி முகாம்கள் பற்றிக் கூறுகையில்:
“AC மிலான் மற்றும் கொழும்பு அத்லெடிக் கால்பந்து கழகம் ஆகியவற்றின் கூட்டணியால் உருவான இந்தத் திட்டம் புதிய நாடுகளில் கால்பந்து பற்றுள்ள ஆர்வத்தையும், AC மிலான் அமைப்பின் விரிவாக்கத்தையும் ஊக்குவிக்கிறது. உலகம் முழுவதும் புதிய வாய்ப்புகளை அளிப்பதில் எப்போதும் பெருமையும் உற்சாகமும் கொண்டவர்களாகிய நாங்கள், இலங்கையில் மிலான் இளையோர் கால்பந்து அமைப்பின் செயற்பாட்டினால் மகிழ்ச்சி அடைகின்றோம்”
கொழும்பு அத்த்லெடிக் கால்பந்து கழகத்தின் தலைவர் அஜய் வீர் சிங் கூறுகையில்:
“இலங்கையில் கால்பந்துக்கும் விளையாட்டுப் பள்ளிகளுக்கும் புதிய யுகத்தைத் தொடங்கும் முயற்சி இதுதான். AC மிலான் தங்கள் 125 வருட பாரம்பரியத்தையும் அவர்களது திட்ட நுணுக்கங்களையும் முழுமையான பயிற்சி செயலமைப்பாக கொண்டு இலங்கையின் அடுத்த தலைமுறைக்கு கொண்டு வருகின்றனர். இதன் மூலம் 5 வயது தொடக்கம் 17 வயது வரையிலான சிறுவர்கள், சிறுமிகள் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்துவதற்கான வழி உருவாகின்றது. ஊட்டச்சத்து, மனநலம், வலுச்சேர்த்தல் மற்றும் பல முழுமையான வழிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.”
கொழும்பு அத்லெடிக் கால்பந்து கழகம், இலங்கையின் அடுத்த தலைமுறைக்கு அறிவியல் மற்றும் திட்டமிட்ட விளையாட்டுப் பயிற்சி முறையை கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் உருவாகியுள்ளது. இது கால்பந்து மட்டுமல்லாது மனதையும் உடலையும் முழுமையாக வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறது.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<