பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான சகீப் அல் ஹஸனிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>மனுதி, லிமன்சா அதிரடியில் இலங்கை மகளிருக்கு முதல் வெற்றி<<
இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகளில் முறையற்ற பாணியில் பந்துவீசியதாக குற்றம் சுமத்தப்பட்ட சகீப் அல் ஹசனிற்கு இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் பந்துவீச இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) மூலம் முன்னதாக தடை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அவருக்கான பந்துவீச்சுத் தடை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் பொருந்துவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) உறுதிப்படுத்தியிருக்கின்றது. எனவே சகீ்ப் அல் ஹஸனிற்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தற்போது தடை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
சர்ரேய் அணிக்காக கடந்த செப்டம்பர் மாதம் சோமர்செட் அணியுடன் முதல்தர கவுண்டி போட்டியொன்றில் விளையாடிய சகீப் அல் ஹஸன் போட்டி நடுவர்கள் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பந்துவீச்சு தடைக்கு முகம் கொடுத்திருந்தார். இதன் மூலம் தன்னுடைய 17 வருட தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் சகீப் அல் ஹஸன் முதல் தடவையாக முறையற்ற பாணியில் பந்துவீசுவதாக குற்றச்சாட்டு ஒன்றினை முகம் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் சகீப் அல் ஹஸன் பந்துவீச்சு சோதனைகளுக்கு முகம் கொடுத்து அதில் தனது பந்துவீச்சு முறையான பாணியில் இருப்பதனை உறுதிப்படுத்துவதன் மூலமே மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேநேரம் தடைக்காலம் காணப்படும் வரையில் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. எனினும் சகீப் அல் ஹஸனிற்கு பங்களாதேஷின் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து பந்துவீச முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<