பாகிஸ்தான் T20I தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியின் புதிய தலைவராக ஹென்ரிச் கிளாசென் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணி தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (05) போர்ட் எலிஸபெத், சென் ஜோர்ஜ் பார்க் கெபெர்ஹா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணியானது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20I தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் T20I தொடரானது டிசம்பர் 10ஆம் திகதியும், ஒருநாள் தொடர் டிசம்பர் 17ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ள நிலையில், டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெறவுள்ள T20I தொடரில் ஆடும் தென்னாப்பிரிக்கா அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (04) அறிவித்தது.
- தென்னாபிரிக்கா கிரிக்கெட்டின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற டயலொக் TV
- இரண்டாவது டெஸ்டில் மாற்றங்களின்றி களமிறங்கும் இலங்கை
இதில் எய்டன் மார்க்ரம், மார்கோ ஜொன்சன், கேசவ் மஹாராஜ், கங்கிசோ ரபாடா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்ட வீரர்கள் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதன் காரணமாக அவர்களுக்கு ஓய்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா T20I அணியின் தலைவராக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஹென்ரிச் கிளாசென் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம், தப்ரைஸ் ஷம்ஸி, ஆன்ரிச் நோர்ட்ஜே, ஜோர்ஜ் லிண்டே உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, டேவிட் மில்லர், ரீசா ஹென்ரிக்ஸ், ரஸ்ஸி வேண்டர் டூசென், மெத்யூ பிரீட்ஸ்கி, ரியான் ரிக்கெல்டன், குவேனா மபாகா மற்றும் ஓட்னீல் பார்ட்மேன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா T20I அணி விபரம்: ஹென்ரிச் கிளாசென் (தலைவர்), ஓட்னீல் பார்ட்மேன், மெத்யூ ப்ரீட்ஸ்கி, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், பெட்ரிக் க்ரூகர், ஜோர்ஜ் லிண்டே, குவேனா மபாகா, டேவிட் மில்லர், அன்ரிச் நோர்ட்ஜே, நகாபா பீட்டர், ரியான் ரிக்கேல்டன், தப்ரைஸ் ஷம்சி, அண்டில் சிமெலேன் மற்றும் ரஸ்ஸி வேண்டர் டூசென்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<