யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த மூன்று இளம் கிரிக்கெட் வீரர்கள் இலங்கையின் தேசிய கனிஷ்ட கிரிக்கெட் அணிகளில் இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
>>இலங்கை வரும் பங்களாதேஷ் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணி<<
அந்தவகையில் யாழ். மத்திய கல்லூரியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ரஞ்சித் குமார் நியூட்டன், மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி வீரரான மாலிங்க பாணியில் பந்துவீசும் குகதாஸ் மாதுளன் ஆகிய இரண்டு வீரர்களும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கட் அணிக்காக தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு, இந்த இரண்டு வீரர்களும் இலங்கையினை இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் பிரதிநிதித்துவம் செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமுனையில் யாழ். ஹார்ட்லி கல்லூரியின் சுழல்பந்துவீச்சாளரான விக்னஸ்வரன் ஆக்காஷ் இலங்கையின் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். ஆக்காஷ் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பங்களாதேஷ் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் தொடர்களில் பங்கேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வீரர்கள் மூவரும் மாகாண அணிகளுக்கான தொடரில் தம்புள்ளை அணியினை பிரதிநிதித்துவம் செய்து தங்களது திறமைகளை வெளிக்காட்டியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை தேசிய கனிஷ்ட கிரிக்கெட் அணிகளில் இடம்பிடித்த இந்த வீரர்கள் மூவருக்கும், தம்புள்ளை அணியினை மாகாண தொடரில் பிரதிநிதித்துவம் செய்த வீரர்களுக்கும் இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவான் குமார் சங்கக்கார ஒரு தொகுதி கிரிக்கெட் உபகரணங்களை ஐக்கிய இராச்சியத்திலிருந்து அன்பளிப்புச் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: Ranjan Paranavithana, ரவி வர்மன்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<