ஐபிஎல் மெகா ஏலத்தில் இடம்பிடித்த வியாஸ்காந்த்

Indian Premier League 2025

57
Practice sessions ahead of 2nd ODI

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ள 564 வீரர்களில் 19 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இந்த வீரர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த்தும் இடம்பெற்றுள்ளதுடன், அவருக்கான அடிப்படை விலையாக இந்திய பணப்பெறுமதியில் 75 இலட்சம் ரூபா நிரண்யிக்கப்பட்டுள்ளது 

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் ஜித்தாவில் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது 

அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விபரங்களை அறிவித்துவிட்டன. 

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முதற்கட்டமாக 1,165 இந்திய வீரர்கள், 409 வெளிநாட்டு வீரர்கள் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் நேற்று (15) வெளியிட்டுள்ளது 

அதன்படி இந்த மெகா ஏலத்திற்கு பங்கேற்கும் 574 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் இறுதிசெய்துள்ளது. அந்தவகையில், இந்த ஏலத்தில் பங்கேற்கும் 574 வீரர்களில் 366 பேர் இந்திய வீரர்கள், 208 (3 ஐசிசி அங்கத்துவ நாடுகளின் வீரர்கள் உட்பட) வெளிநாட்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

இதுதவிர்த்து இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ள் வீரர்களின் அதிகபட்ச அடிப்படை தொகையாக இந்திய பணப்பெறுமதியில் 2 கோடி ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 81 வீரர்கள் 2 கோடி ரூபா பிரிவில் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளார். மேற்கொண்டு 1.5 கோடி ரூபா அடிப்படை விலையில் 27 வீரர்களும், 1.25 கோடி ரூபா அடிப்படை விலையில் 18 வீரர்களும், ஒரு கோடி ரூபா அடிப்படை விலையில் 23 வீரர்களும் தங்களது பெயர்களை பதிவுசெய்துள்ளனர். மேற்கொண்டு எந்தெந்தெ வீரர்கள் எப்போது ஏலம் விடப்படுவார்கள் என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது 

இம்முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் மூத்த வீரர் என்ற பெருமையை 42 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார். அதேபோல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் இளம் வயது வீரராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கனவே இந்திய 19 வயதின்கீழ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் பிரிவில் வரவுள்ள வீரர்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது. 

அதில், ஜோஸ் பட்லர், ஸ்ரேயாஸ் ஐயர், ககிசோ ரபாடா, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் 2ஆவது பிரிவில் யுஸ்வேந்திர சாஹல், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், கேஎல் ராகுல், மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ் ஆகியோரும், 3ஆவது பிரிவில் ஹெரி ப்ரூக், டெவோன் கொன்வே, ஜேக் ஃபிரேசர், எய்டன் மார்க்ரம், தேவ்தத் படிக்கல், ராகுல் த்ரிப்பாட்டி, டேவிட் வோர்னர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அதேபோல, 4ஆவது பிரிவில் ரவிச்சந்திரன் அஸ்வின், வெங்கடேஷ் ஐயர், மிட்சல் மார்ஷ், கிளென் மெக்ஸ்வெல், ஹர்சல் படேல், ரச்சின் ரவீந்திரா மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 

5ஆவது பிரிவில் விக்கெட் காப்பாளர்களான ஜொனி பேர்ஸ்டோவ், குயிண்டன் டி கொக், ரஹ்மானுல்லா குர்பாஸ், இஷான் கிஷன், பில் சோல்ட் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். நடராஜன், ட்ரென்ட் போல்ட், ஜோஷ் ஹேசல்வுட், பிரசித் கிருஷ்ணா, அண்ட்ரிச் நோர்கியே, கலீல் அஹ்மட் உள்ளிட்டோர் 6ஆவது பிரிவிலும், இடம்பெற்றுள்ளனர். 

இந்த நிலையில், இம்முறை ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் 19 இலங்கை வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் அதிகபட்ச தொகையான 2 கோடி ரூபா அடிப்படை விலையில் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர் 

இது தவிர, 75 இலட்சம் ரூபா அடிப்படை விலையில் 15 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவன் துஷார, ஜெப்ரி வெண்டர்சே, பெத்தும் நிஸ்ஸங்க, பானுக ராஜபக்ஷ, கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, சரித் அசலங்க, துனித் வெல்லாலகே, டில்ஷான் மதுஷங்க, துஷான் ஹேமன்த, தசுன் ஷானக மற்றும் லஹிரு குமார ஆகிய வீரர்கள் 75 இலட்சம் ரூபா அடிப்படை விலையில் ஏலத்தில் இடம்பெறுகின்றனர் 

இதனிடையே, 23 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்க மற்றும் 19 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் துமிந்து செவ்மின ஆகிய இருவருக்கும் 30 இலட்சம் ரூபா அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மறுபுறம் இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரனவை ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக சென்னை சுபர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள் மற்றும் அவர்களின் அடிப்படை விலையின் முழுமையான பட்டியல்: 

200 இலட்சம் இந்திய ரூபா  

  1. வனிது ஹசரங்க 
  2. மஹீஷ் தீக்ஷன  

75 இலட்சம் இந்திய ரூபா 

  1. விஜயகாந்த் வியாஸ்காந்த் 
  2. குசல் மெண்டிஸ் 
  3. குசல் ஜனித் பெரேரா 
  4. நுவன் துஷார 
  5. பானுக ராஜபக்ஷ 
  6. பெத்தும் நிஸ்ஸங்க 
  7. ஜெப்ரி வெண்டர்சே 
  8. துஷ்மந்த சமீர 
  9. கமிந்து மெண்டிஸ் 
  10. துனித் வெல்லாலகே 
  11. சரித் அசலங்க 
  12. டில்ஷான் மதுஷங்க  
  13. துஷான் ஹேமன்; 
  14. தசுன் ஷானக 
  15. லஹிரு குமார  

30 இலட்சம் இந்திய ரூபா 

  1. எஷான் மாலிங்க 
  2. துமிந்து செவ்மின 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<