இலங்கையுடனான ஒருநாள் தொடரிலிருந்து லொக்கி பெர்குஸன் விலகல்

New Zealand Tour Of Sri Lanka 2024

49
இலங்கையுடனான ஒருநாள் தொடரிலிருந்து லொக்கி பெர்குஸன் விலகல்

காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லொக்கி பெர்குஸன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவருக்குப் பதிலாக மாற்றீடு வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவை அணியில் இணைத்துக் கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட T20i தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த T20i தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், T20i தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்தது.

இதனையடுத்து இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை (13) தம்புள்ளவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லொக்கி பெர்குஸன் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது T20i போட்டியின் போது தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஹெட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய லொக்கி பெர்குஸன், தனது இரண்டாவது ஓவரை வீசி முடித்த நிலையில் இடது காலில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். இதனால் இப்போட்டியில் அவர் மேற்கொண்டு பந்துவீச முடியாமல் பெவிலியன் இருந்த அவர், மீண்டும் களத்திற்கு திரும்பவில்லை.

இதனிடையே, குறித்த போட்டியின் பிறகு லொக்கி பெர்குஸனுக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைந்தது தெரியவந்தது. இதன் காரணமாக இலங்கையுடனான ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலகிய நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நியூசிலாந்து செல்லவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதேசமயம், லொக்கி பெர்குஸனுக்கு மாற்றீடு வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே நியூசிலாந்து ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<