ஆடவருக்கான 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு

Men's U19 Asia Cup 2024

52
Men's U19 Asia Cup 2024

ஆசிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்ற 11ஆவது ஆடவருக்கான 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 8ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்;ச்சியாக 3ஆவது முறையாக 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுவது மற்றுமொரு சிறப்பம்சமாகும். முன்னதாக, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றதுடன், 2013ஆம் ஆண்டு முதல் முறையாக ஐக்கிய அரபு இராச்சியம் 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திப்பதுடன், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை நேபாள அணி எதிர்த்தாடவுள்ளது.

8 அணிகள் பங்கேற்கின்ற இப்போட்டித் தொடரின் குழு ‘A’ இல் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான் ஆகிய 4 அணிகள் அங்கம் வகிக்கின்றன. அதேபோல, குழு ‘B’ இல்  நடப்புச் சம்பியனான பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகளும் தங்கள் குழுவிலுள்ள ஏனைய 3 அணிகளுடன் தலா ஒரு தடவை எதிர்த்து விளையாடும். புள்ளிகள் பட்டியலில் தத்தம் குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி 8ஆம் திகதி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனிடையே, இம்முறை ஆடவருக்கான 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி, தனது முதல் போட்டியில் நவம்பர் 29ஆம் திகதி நேபாளம் அணியையும், டிசம்பர் முதலாம் திகதியன்று ஆப்கானிஸ்தான் அணியையும், டிசம்பர் 5ஆம் திகதியன்று பங்களாதேஷ் அணியையும் சந்திக்கவுள்ளது.

1989ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்றுள்ள 10 தொடர்களில் 7 தடவைகள் இந்தியா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், ஒரு தடவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் (2012) ஆகியன கூட்டாக சம்பியன் பட்டத்தை வென்றிருந்தன.

2017இல் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியும், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணியும் சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 தடவைகள் உப சம்பியன் பட்டம் வென்றுள்ள இலங்கை ஒரு தடவை கூட சம்பியன் பட்டம் வென்றதில்லை. இந்த முறை அந்த மோசமான சாதனையை மாற்றியமைத்து முதல் தடவையாக சம்பியன் பட்டம் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<