2024ஆம் ஆண்டுக்கான ஹொங் கொங் சிக்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணியானது, இரண்டாவது தடவையாக தொடரின் சம்பியன் பட்டத்தினை வென்று நாடு திரும்புகின்றது.
>>ஹொங்கொங் சிக்சஸ் காலிறுதியில் இலங்கை<<
ஹொங் கொங் சிக்ஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றை முறையே வீழ்த்திய பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.
மொங் கொக்கில் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை பாகிஸ்தானை முதலில் துடுப்பாடப் பணித்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் வீரர்கள் அனைத்து விக்கெட்டுக்களையும் 5.2 ஓவர்களில் பறிகொடுத்து 72 ஓட்டங்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக முஹம்மட் அக்ஹ்லாக் 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களை எடுத்தார். மறுமுனையில் இலங்கை பந்துவீச்சு சார்பில் தனன்ஞய லக்ஷான் மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 73 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை வீரர்கள் குறித்த வெற்றி இலக்கை 5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களுடன் அடைந்தனர்.
>>லங்கா T10 சுபர் லீக்கில் களமிறங்கும் 6 அணிகள்<<
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சந்துன் வீரக்கொடி 13 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 34 ஓட்டங்கள் பெற்றார். பாகிஸ்தான் பந்துவீச்சில் பாஹிம் அஷ்ரப் மற்றும் ஹூசைன் தலாட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.
போட்டியின் ஆட்டநாயகனாக தனன்ஞய லக்ஷான் தெரிவு செய்யப்பட, தொடரின் சிறந்த வீரராக சுழல்பந்துவீச்சாளரான தரிந்து ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் சுருக்கம்
பாகிஸ்தான் – 72/6 (5.2) முஹம்மட் அக்ஹ்லாக் 48, தனன்ஞய லக்ஷான் 6/2, தரிந்து ரத்நாயக்க 25/2
இலங்கை – 76/3 (5) சந்துன் வீரக்கொடி 34, ஹொசைன் தலாட் 18/1
முடிவு – இலங்கை 3 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<