சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) புதிதாக வெளியிட்டுள்ள டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ், முதற் தடவையாக முதல் 10 இடங்களுக்குள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நிறைவடைந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்த கமிந்து மெண்டிஸ் இந்த முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கமிந்து மெண்டிஸ் கடந்த மாதம் 4 போட்டிகளில் 90.20 என்ற சராசரியுடன் 451 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அரைச் சதம் அடித்து இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர், அதன் பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 114 ஓட்டங்களையும், 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களையும் குவித்தார்.
இதன் மூலம் டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டது முதல் தான் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளிலும் 50 அல்லது 50க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனைக்கு கமிந்து மெண்டிஸ் உரித்தானார். கடந்த 75 வருங்களில் மிகவேகமாக 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.
- ஐ.சி.சி. இன் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக கமிந்து மெண்டிஸ்
- இளம் வீரர்களுடன் இலங்கையை எதிர்கொள்ளும் நியூசிலாந்
- அதிரடி வெற்றியுடன் ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற இலங்கை
அத்துடன், கிரிக்கெட் உலகின் நட்சத்திர ஜாம்பவான் சேர் டொன் பிறெட்மனின் 13 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்கள் என்ற சாதனையையும் கமிந்து மெண்டிஸ் இந்த தொடரில் வைத்து சமப்படுத்தினார்.
அத்துடன் தனது 13ஆவது இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்ததுடன் கடந்த 75 வருடங்களில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல் சாதனையை எட்டியவர் என்ற பெருமைக்கு உரித்தானார். இவ்வாறு பல சாதனைகளைப் படைத்த அவர், செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி இன் சிறந்த வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.
இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கமிந்து மெண்டிஸ், 5 சதங்கள், 4 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 1004 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்த நிலையில், ஐசிசி இனால் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில், கமிந்து மெண்டிஸ் ஓர இடம் முன்னேறி 10ஆவது இடத்தையும், திமுத் கருணாரட்ன 2 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தையும், தனன்ஜய டி சில்வா ஒரு இடம் முன்னெறி 17ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதனிடையே, இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மற்றும் பாகிஸ்தான் – இங்கிலாந்து இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது. இதில் வீரர்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட தரவரிசையில் இந்தியாவின் ஜெய்ஸ்வால் 4ஆவது இடத்திலும், ரிஷப் பண்ட் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு விராட் கோலியை பின்தள்ளி 6ஆவது இடத்திலும், விராட் கோலி (ஒரு இடம் சரிந்து) 8ஆவது இடத்திலும் உள்ளனர்.
இதேவேளை, ஐசிசி டெஸ்ட் தரவரிசையை பொருத்தவரை துடுப்பாட்டத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட், பந்துவீச்சில் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சகலதுறை வீரர்கள் வரிசையில் மற்றுமொரு இந்திய வீரரான ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதலிடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<