ஆஸி. கால்பந்து அணியில் கலக்கும் இலங்கை வம்சாவளி தமிழர்

254

2026 இல் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு முன்னோடியாக நடைபெற்று வருகின்ற ஆசிய வலயத்துக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை என்ற வீரர் அவுஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்து தான் ஆடிய முதல் போட்டியிலேயே கோல் அடித்து அசத்தி அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.   

2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான தகுகுதிகாண் சுற்றுப் போட்டிகள் தற்போது பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன.   

2026 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து பின்னடைவை வந்த நிலையில், அணியின் முகாமையாளராக புதிதாக பொறுப்பேற்ற டோனி போபாவிக் வியாழக்கிழமை நடைபெற்ற சீனாவுக்கு எதிரான போட்டியில் நிஷான் வேலுப்பிள்ளையை அணிக்குள் இணைத்துக்கொண்டார். 

அவுஸ்திரேலிய அணிக்காக மாற்று வீரராக போட்டியின் 83ஆவது நிமிடத்தில் களம் நுழைந்த நிஷான், அடுத்த 7 நிமிடத்தில் தனது அறிமுக போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார். இதன்மூலம் குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் அதிகரித்துக் கொண்டது. 

இதனிடையே, சீனாவுக்கு எதிரான போட்டியில் கோல் அடித்து தனது அணிக்கு மிகவும் அவசியமான வெற்றியைத் தேடிக் கொடுத்தது தனக்கு மகிழ்ச்சி என நிஷான் வேலுப்பிள்ளை கூறியிருக்கின்றார். மேலும், நாங்கள் ஒரு வெற்றியைப் பெற்றோம் என்பதும் மிகவும் நல்லது. அவுஸ்திரேலியாவுக்காக விளையாடுவதை நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன் என்றார். 

எனவே, எதிர்காலத்தில் அவுஸ்திரேலிய கால்பந்து அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடுவார் எனவும், அவரது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.   

23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை 2019 முதல் அவுஸ்திரேலியாவில் எடிலெய்ட் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் அவுஸ்திரேலிய அணிக்காக கோல் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் அணிந்திருந்த 7 ஆம் இலக்க ஜெர்சியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜெர்சி இலக்கமும் 7 என்பது குறிப்பிடத்தக்கது. 

  >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<