ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்தின் இந்தியாவுக்கு எதிரான தங்களுடைய மூன்றாவது போட்டியில் 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணி மோசமான தோல்வியை தழுவியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இந்திய மகளிர் அணி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் அற்புதமாக ஆடினர்.
>>இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்த இலங்கை
முதல் விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் 98 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், 50 ஓட்டங்களை பெற்றிருந்த ஸ்மிர்தி மந்தமனா ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இதனையடுத்த பந்தில் ஷபாலி வர்மா 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர் இந்திய அணியின் ஓட்டவேகம் குறைவடைந்த போதும் ஹர்மன்பிரீட் கவூர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 52 ஓட்டங்களை விளாச இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை குவித்துக்கொண்டது. இலங்கை அணியின் பந்துவீச்சில் சமரி அதபத்து மற்றும் அமா காஞ்சனா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி ஆரம்பத்திலிருந்து தடுமாற தொடங்கியது. இரண்டாவது பந்தில் விஷ்மி குணரத்ன ஓட்டங்களின்றி ஆட்டமிழக்க, சமரி அதபத்து ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். இதனை தொடர்ந்து ஹர்சிதா சமரவிக்ரம 3 ஓட்டங்களுடன் வெளியேற இலங்கை அணி 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
>>கேன் வில்லியம்சனை முதல் டெஸ்ட்டில் இழக்கும் நியூசிலாந்து?
அதன் பின்னர் கவீஷா டில்ஹாரி 21 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்சீவனி 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்த போதும், இந்த ஓட்ட எண்ணிக்கைகள் இலங்கை அணிக்கு வலுவளிக்கவில்லை. இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் ஏனைய வீராங்கனைகளும் தடுமாற 90 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை மகளிர் அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தங்களுடைய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. அதேநேரம் தங்களுடைய இறுதி குழுநிலைப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்வரும் 12ம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<