இலங்கை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிப்பு

West Indies Tour of Sri Lanka 2024

77

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I தொடரில் விளையாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.   

அந்த அணியின் முன்னணி வீரர்களான நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், அகீல் ஹொசைன் மற்றும் ஷிம்ரன் ஹெட்மையர் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். 

இலங்கை அணியானது அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி முதல் T20I தொடரும், ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது. 

மேலும் இதில் T20I தொடரின் அனைத்துப் போட்டிகளும் தம்புள்ளையிலும், ஒருநாள் தொடரின் அனைத்துப் போட்டிகளும் கண்டியிலும் நடைபெறவுள்ளது 

இறுதியாக இலங்கை அணி விளையாடிய இந்தியாவுக்கு எதிரான T20I தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. எனவே, அந்த உத்வேகத்துடன் அந்த அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. அதேசமயம் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் தென்னாப்பிரிக்காவுடனான தொடரை வென்ற கையோடு இத்தொடரை எதிர்கொள்வதால் ரசிகர்களின் எதிபார்ப்புகளும் அதிகரித்துள்ளன 

இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (05) அறிவித்துள்ளது. அதன்படி T20I அணியின் தலைவராக ரோவ்மன் பாவெலும், துணைத் தலைவராக ரோஸ்டன் சேஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல, ஒருநாள் அணியின் தலைவராக ஷாய் ஹோப்பும், துணைத் தலைவராக அல்சாரி ஜோசப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்த அணியில் நிக்கோலஸ் பூரன், ஷிம்ரன் ஹெட்மையர், அகீல் ஹொசைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தனிப்பட்ட காரணங்களால் இடம்பெறவில்லை 

அதேசமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள இளம் அதிரடி வீரர் பிராண்டன் கிங், சகலதுறை வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகிய இருவரும் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதுதவிர ஷமார்  ஜோசப், அல்சாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஆண்ட்ரே ஃபிளெட்சர், எவின் லூயிஸ், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர் 

இதனிடையே, இதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டருக்கு இரு அணியிலும் இடம் கிடைக்கவில்லை. 

மேற்கிந்தியத் தீவுகள் T20I அணி: ரோவ்மேன் பவல் (தலைவர்), ரோஸ்டன் சேஸ், ஃபேபியன் ஆலன், அலிக் அதானாஸ், ஆண்ட்ரே பிளெட்சர், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், அல்சாரி ஜோசப், ஷாய் ஹோப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடாகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர். 

மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (தலைவர்), அல்சாரி ஜோசப், ஜுவல் ஆண்ட்ரூ, அலிக் அதானாஸ், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹேடன் வால்ஷ் ஜூனியர். 

இலங்கைமேற்கிந்தியத் தீவுகள் தொடர் அட்டவணை 

T20I தொடர் 

  • முதல் T20I, தம்புள்ளை, ஒக்டோபர் 13 
  • 2ஆவது T20I, தம்புள்ளை, ஒக்டோபர் 15 
  • 3ஆவது T20I, தம்புள்ளை, ஒக்டோபர் 17 

ஒருநாள் தொடர் 

  • முதல் ஒருநாள் போட்டி, கண்டி, ஒக்டோபர் 20 
  • 2ஆவது ஒருநாள் போட்டி, கண்டி, ஒக்டோபர் 23 
  • 3ஆவது ஒருநாள் போட்டி, கண்டி, ஒக்டோபர் 26 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<