ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை

208
PRAVEEN JAYAWICKRAMA

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை ஓராண்டு கிரிக்கெட் தடை விதித்துள்ளது. 

ஆனால் இந்த ஓராண்டு தடையை 6 மாத காலத்திற்கு இடைநிறுத்தவும் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிகளை மூன்று தடவைகள் மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரம மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் ஐசிசி இன் ஊழல் தடுப்பு பிரிவுக்கு அறிவிக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன 

மேலும், விசாரணைக்கு தேவையான தகவல்களை மறைத்தல், திரித்தல், சாட்சியங்கள் அல்லது ஆவணங்கள் அல்லது பிற தகவல்களை மறைத்தல் அல்லது தாமதித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும். ஐசிசி சட்ட விதி 2.4.7 மீறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி முதல் 14 நாட்கள் அவகாசமும் ஐசிசி இன் ஊழல் தடுப்பு பிரிவால் வழங்கப்பட்டது 

இதன்படி, ஐசிசி இன் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஓராண்டு தடை விதித்துள்ளது. ஆனால் இந்த ஓராண்டு தடையை 6 மாத காலத்திற்கு இடைநிறுத்தவும் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. 

2021ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட பிரவீன் ஜெயவிக்ரம, இறுதியாக கடந்த 2022ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான T20I தொடரில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். இதுவரை இலங்கை அணிக்காக தலா 5 டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் அவர் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<