உலக கால்பந்து தரவரிசையில் இலங்கை அசுர முன்னேற்றம்

Football Sri Lanka

86

உலக கால்பந்து தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்உலக கால்பந்து தரவரிசையில் இலங்கை அணி 5 இடங்கள் முன்னேறி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 200-ஆவது இடத்தைப் பிடித்து முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 

FIFA வினால் நேற்று முன்தினம் (19) வெளியிடப்பட்ட கால்பந்து அணிகளுக்கான புதிய தரவரிசையில் இலங்கை 831.39 புள்ளிகளைப் பெற்று 200ஆவது இடத்தைப் பிடித்துள்ளுத. முன்னதாக இலங்கை அணி சர்வதேச கால்பந்து தரவரிசையில் 205வது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் நிறைவடைந்த கம்போடியாவுக்கு எதிராக நடைபெற்ற 2027 ஆசியக் கிண்ண கால்பந்து தகுதிகாண் தொடருக்கான முதல் போட்டி சமநிலை அடைந்ததன் காரணமாக உலக கால்பந்து அணிகளின் தரவரிசையில் 205வது இடத்திலிருந்து 203வது இடத்திற்கு முன்னேறிய இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் கம்போடிய அணியை 4–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலக கால்பந்து தரவரிசையில் 200ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டு இப்புதிய மைல்கல்லை எட்டியுள்ளது 

1998 ஆம் ஆண்டு உலக கால்பந்து தரவரிசையில் 122ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி, 2019இல் 205ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. 2022ஆம் ஆண்டாகும்போது மீண்டும் 207ஆவது இடம் வரை பின்தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ஆசிய அளவிலான தரவரிசையில் இலங்கை கால்பந்து அணி தற்போது 45ஆவது இடத்தில் உள்ளது. தெற்காசியாவைப் பொறுத்தவரை இந்தியா 126ஆவது ;டத்திலும், மாலைதீவுகள் 163ஆவது இடத்திலும், நேபாளம் 176ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 186ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 197ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, உலக கால்பந்து தரவரிசையில் ஆர்ஜென்டீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ், ஸ்பெய்ன், இங்கிலாந்து மற்றும் பிரேசில் ஆகிய அணிகள் அடுத்த 4 இடங்களில் உள்ளன. 

இதனிடையே, தொடர்ந்து வெற்றிப் படிகளில் ஏறி வரும் இலங்கை கால்பந்து அணி அடுத்ததாக 2026 மார்ச் 25ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 2027 ஆசியக் கிண்ண கால்பந்து தகுதிகாண் தொடருக்கான 3ஆவது சுற்றில் விளையாடவுள்ளது. குறித்த சுற்றில் விளையாட ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், புரூனே, சீன தாய்ப்பே, கிழக்கு திமோர், ஹாங்கொங், இந்தியா, லாவோஸ், லெபனான், மலேசியா, மாலைதீவுகள், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சிரியா, இலங்கை, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துர்க்மெனிஸ்தான், வியட்நாம் மற்றும் யெமன் ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன. 

இந்த போட்டி அட்டவணைக்கான குலுக்கல் இந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி நடைபெறும். அன்றைய தினம் உலக கால்பந்து அணிகளின் தரவரிசை நிலை கருத்தில் கொள்ளப்படும். 24 அணிகள் 4 பிரிவுகளின் கீழ் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்தப் போட்டி அட்டவணை வெளியிடப்படும். ஒவ்வொரு குழுவிலும் வெற்றியீட்டுகின்ற அணி மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.   

>>மேலும்பலகால்பந்துசெய்திகளைப்படிக்க<<