நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை அணி 202 ஓட்டங்களால் முன்னிலையை பெற்றுள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில் நியூசிலாந்து அணி 244 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
இரண்டாம் நாள் ஆதிக்கத்தை தமதாக்கிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி
நியூசிலாந்து அணி சிறந்த நிலையில் ஆட்டத்தை தொடர்ந்திருந்த போதும், இன்றைய தினம் இலங்கை அணியின் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு அற்புதமாக அமைந்திருந்தது.
இரண்டாவது நாளில் சிறப்பாக ஆடிய டொம் பிலெண்டலின் விக்கெட்டினை பிரபாத் ஜயசூரிய கைப்பற்ற, அரைச்சதம் கடந்த டெரைல் மிச்சல் 57 ஓட்டங்களை பெற்றிருந்த போது ரன்-அவுட் ஆனார். இதனையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 304 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் இறுதியாக கிளேன் பிலிப்ஸ் வேகமாக ஓட்டங்களை குவித்து 49 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்த போதும், மறுமுனையில் இறுதி விக்கெட் வீழ்த்தப்பட நியூசிலாந்து அணி 340 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் 36 ஓட்டங்கள் பின்னடைவில் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணிக்கு 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து பெதும் நிஸ்ஸங்க ஏமாற்றம் கொடுத்தார். இருப்பினும் திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமால் சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.
இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 147 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதுடன், அரைச்சதங்களையும் கடந்தனர். இதில் துரதிஷ்டவசமாக திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 61 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இலங்கை அணி சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
கமிந்து அபார சதத்தோடு முன்னிலை பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி
இதில் முதல் இன்னிங்ஸில் சதம் கடந்த கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார். இலங்கை அணி 178 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருக்க, இதனை தொடர்ந்து களமிறங்கிய தனன்ஜய டி சில்வா மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவுரை சிறப்பாக ஆடினர். ஆட்டமிழக்காமல் இவர்கள் இருவரும் 59 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, இலங்கை அணி மூன்றாவது நாள் இறுதியில் 237 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், 202 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. பந்துவீச்சில் வில்லியம் ஓரோர்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, தனன்ஜய டி சில்வா மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் தலா 34 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.
நாட்டில் நாளைய தினம் (21) ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால், நான்காவது நாள் ஆட்டம் 22ம் திகதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் ஓய்வு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<